எளிமையின் சிகரம் ஜீவானந்தம்…

0
442
பொதுவுடைமைப் போராளி

[18/01/2022] தோழர் ப.ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21,1907 – ஜனவரி 18,1963)

தனது 40 ஆண்டுகால பொது வாழ்க்கையில் பல போராட்டங்களை முன்னெடுத்து பலமுறை சிறைக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த மாபெரும் போராளியான ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாள் இன்று.

நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி எனும் ஊரில் 1907 ஆம் ஆண்டு (பட்டத்தார் பிள்ளை – உமையம்மாள்) ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து பல்வேறு சிறப்புமிக்க போராட்டங்களை முன்னெடுத்து விடுதலை தாகத்தில் இருந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்..

மகாத்மா காந்தியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்ட அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே “சுதந்திர வீரன்” எனும் நாவலை எழுதி இளைஞர்கள் மத்தியில் புரட்சிக்கான விதையைத் தூவினார். ‘பகத்சிங்’ தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகனானேன்” என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து மக்களைக் கவர்ந்தார். அவரின் இச்செயலினால் கோபம் கொண்ட ‘ஆங்கிலேய அரசு’ அவரைக் கைது செய்து கைக் கால்களில் சங்கிலி போட்டு திருச்சி நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தது. அப்போது அவருக்கு வயது 17தான்.

இப்படி பலமுறை போராடி சிறை சென்று தனது செயற்பாடுகளால் மகாத்மா காந்தியைக் கவர்ந்தார்.”சிறந்த காந்தியவாதி, சுயமரியாதை வீரர், தமிழ் பற்றாளர் ,பொதுவுடைமை இயக்கத் தலைவர் ,நாத்திகர், இலக்கியவாதி, பத்திரிக்கையாளர்” எனப் பன்முகம் கொண்ட அவர் “குடியரசு ,பகுத்தறிவு ,புரட்சி, ஜனசக்தி, தாமரை” போன்ற பத்திரிகைகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளையும் கருத்துகளையும் பதிவு செய்தார்.

பொதுவுடமைக் கட்சி கூட்டங்களில் முதல் முறையாக தமிழ் இலக்கியம்,பண்பாடு, வரலாறு போன்றவற்றைப் பேசி ஒரு சிறந்த மொழிப் பற்றாளராகவும் விளங்கினார்..

இவரின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட காந்திஜியிடம் இருந்து இவருக்கு ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. அதன்படி காந்தியின் பல போராட்டங்களில் பங்கெடுத்து அவரின் உள்ளம் கவர்ந்தார்.. காந்தியின் கொள்கையின் படி மேற்கத்திய உடைகளை துறந்து கதர் ஆடைகளை எப்போதும் உடுத்தினார்.அவரின் இச் செயற்பாடுகள் எதிரணியில் இருந்த காமராசரையும் கவர்ந்தது. காமராசர் ஜுவாவின் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்.

அப்போதைய கடலூர் சட்டமன்ற உறுப்பினர் மகள் ‘கண்ணம்மாவை’ திருமணம் செய்தார்.. உடல் நலக்குறைவால் கண்ணம்மா காலமாக 1948 ஆம் ஆண்டு ‘பத்மாவதி’ என்னும் பெண்ணை ‘சாதி மறுப்புத் திருமணம்’ செய்தார்.. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. ஜுவா எழுதிய கட்டுரைகளும் நூல்களும் நாட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்ப்படுத்தியது. வர்ணாசிரம கொள்கையைத் தூக்கிப் பிடித்ததால் மகாத்மா காந்தியை விட்டு விலகினார்.. ‘பெரியார்’ முன்னெடுத்த ‘சாதி ஒழிப்புப் போராட்டம், மது ஒழிப்புப் போராட்டம்,பெண்ணிய விடுதலை’ போன்ற எண்ணிலடங்கா போராட்டங்களில் இவர் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாகும்..

தன் வாழ்நாள் இறுதி வரை ஓலைக் குடிசையில் ஒரே ஒரு கதர் ஆடையை மட்டும் வைத்துக் கொண்டு நேர்மையாகவும் எளிமையாகவும் வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்..தொழிலாளர்களுக்காக இவர் செய்த போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

1963.சனவரி.18 ஆம் தேதி, தான் இறக்கும் தறுவாயில் அவர் இறுதியாக சொன்ன வார்த்தை (காமராசரிடம் சொல்லிவிடுங்கள்) . ஜீவானந்தம் காலமானார். 2010 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு தபால் தலை ஒன்றை வெளியிட்டது..

-தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்