தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து பேஸ்புக்கில் விமர்சனம் ; தரையில் மூக்கை வைத்து உரசி கொடுமை

0
211

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து பேஸ்புக்கில் விமர்சனம் செய்திருந்த தலித் இளைஞர் கடவுள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து மன்னிப்பு கேட்டாலும் அவரை கோவிலுக்கு அழைத்து சென்று தரையில் மூக்கை வைத்து உரசும்படி கொடுமை செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பிரூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார் மேக்வால். இளைஞரான இவர் தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார்.

இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ‛தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்து படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருந்தது. அதாவது, நாட்டில் பண்டித்களுக்கு மட்டும்தான் கொடுமைகள் நடக்கிறதா. தலித் மக்களுக்கு நடக்கவில்லை. மேலும் ஏழைகளுக்கு தினமும் கொடுமைகள் நடக்கிறது. இவர்களுக்கு பாதுகாப்பு என்று எதுவுமில்லை என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சிலர் ‛ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா’ என கமெண்ட் செய்திருந்தனர். இதையடுத்து கடவுள் குறித்து அவர் அவதூறாக கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார்.

இதையடுத்தும் பிரச்சனை முடியவில்லை. கிராமத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் பரவியது. இதையடுத்து அருகே உள்ள கோவிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜேஷ் குமார் மேக்வாலை சிலர் அழைத்து சென்றனர். அங்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்த வேளையில் அவரது மூக்கை கோயில் தரையில் உரச வற்புறுத்தினர். அவர் மறுப்பு தெரிவித்தாலும் விடவில்லை. இதையடுத்து ராஜேஷ் குமார் மேக்வால் தனது மூக்கை கோவில் தரையில் உரசியுள்ளார். இதனால் அவர் காயமடைந்தார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிரூர் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் தலித், ஆதிவாசி மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் டோல்பூர் மாவட்டம் திவானாவில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். ஆல்வாரில் தலித் இளைஞர் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டதோடு, பாலியில் இன்னொரு தலித் இளைஞர் கொல்லப்பட்டார். தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்