மருத்துவ ஆராய்ச்சிக்கு முழு உடல் தானம் : நெல்லை சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சியான சம்பவம்

0
235

திருநெல்வேலி மாவட்டம் மேலபுத்தனேரி-யை சார்ந்த சமூக ஆர்வலர், பல குடும்பங்களின், துயர் துடைத்து , கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மக்களுக்கான தன்னிறைவை மேம்படுத்த தன் வாழ்நாளில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனராகவும் பணியாற்றிக் கொண்டு தன் பொதுசேவையிலும் ஈடுபட்டு,
பின்தங்கிய மக்களுக்காக தன் உழைப்பினை ஊன்றுகோலாய் தாங்கி, அவர்கள் வாழ்வினை மேம்படுத்த உழைத்து,

தன்வாழ்விற்குப் பின்னும் தன்னுடைய உடல் தன்மண்ணிற்கு செல்ல வேண்டும், என்று எல்லோரும் நினைக்கும் சூழ்நிலையில்கூட தன்னுடைய உடல் வெறும் மண்ணிற்காகவும் புழுக்கள் மக்கிப்போக அழுகிப்போகக்கூடாது, என்று எண்ணி அவை மானுடவியலின் வாழ்விற்கு பயன்பட வேண்டும். என்ற நல்ல எண்ணத்தோடும் கூறிய நோக்கத்தோடும், தன்னுடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கவேண்டும் என்று அவருடைய சிந்தையில் ஏற்பட்ட அந்த நல்லெண்ணத்தை அவர் செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இறந்த பின்பு தன்னுடைய உடலினை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று அந்த மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்து அவற்றினை எழுதியும் ஆவணமாக வைத்துவிட்டு இந்திரன் மடியில் இளைப்பாறி விட்டார். அரியமுத்து என்ற “புத்த நெறி”யை சேர்ந்த அரிய வகை “முத்து”ஆன நமது ஐயா அவர்கள்.

அவர்கள் பெற்றெடுத்த இரண்டு மகன்களான மூத்தவர் தொழிலதிபர் வீரமணி மற்றும் இளையவர் முனைவர் கல்வியாளர், சமூக செயல்பாட்டாளர் குணசேகர் அவர்கள் தங்களுடைய இடத்தில்தான் தகனம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் சூழ்நிலையில் கூட தங்கள் தந்தையின் விருப்பப்படியே அவர்களின் உடல் தானமாக வழங்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும் அவரது உடலினை ஆய்வு செய்து அந்த ஆய்வின் மூலம் பல உயிர்கள் இம்மண்ணில் வாழவேண்டும், நிலைத்திருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பெருந்தன்மை கொண்ட மனப்பான்மையுடன் தந்தையாரின் ஆசைப்படியே ஐயா அரியமுத்து அவர்களின் உடலினை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கி தங்களின் மதிப்பையும் தங்களின் உழவர் குடியாம் கொடை கொடுக்கும் வள்ளல் குடி என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றி விட்டார் இரண்டு தங்க மகன்களும்.

ஐயா அரியமுத்து அவர்களுக்கு இருந்த நோக்கம் அவரது சித்தாந்தம் மற்றும் அவருடைய செயல்பாட்டின் மூலம் வந்தது என்றாலும் கூட அவர்கள் பெற்றெடுத்த இரண்டு மகன்களும், அவர் மறைந்த பின்பு கூட அவர்களின் ஆசை, தன் தந்தையாரின் கனவு நினைவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, பல கொடை வள்ளல்கள் இருப்பார்கள் தானமாக பணத்தைக் கொடுப்பார்கள் பொருளினை கொடுப்பார்கள் செல்வத்தை கொடுப்பார்கள் அவற்றை சம்பாதித்து விடலாம் அவற்றினை வேறு ஏதாவது ஒரு பொருட்களின் மூலம் ஈடுகட்டி விடலாம் ஆனால் தன் தந்தையாரின் உடலையே கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு மிகவும் பெருந்தன்மை கொண்ட மனப்பான்மை வேண்டும், அவற்றினை வார்த்தைகளால் வர்ணித்து எழுதி விடவும். சொல்லிவிடவும் முடியாது அப்படி பெருந்தன்மை கொண்ட மனப்பான்மை உடைய மரியாதைக்குரிய திரு. வீரமணி அவர்கள் மற்றும் முனைவர் குணசேகர் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தானமாக வழங்கியது உழவர் குடிமக்களின் பெருந்தன்மையையும், தங்கள் முன்னோர்களின் கொடை தன்மையையும் இவர்கள் மரபணு மூலமாக நிரூபிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இவர்களை போற்றி பாராட்டி பெருமைப் படுத்துவது மட்டும் நாம் நமது கடமையாக கருதி விட முடியாது. இவற்றினை நாம் மற்றும் நமது சந்ததிகள் பின்பற்றும் அளவு நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இந்த நிகழ்வின் பாடமாக நமக்கு அமைகிறது.

ஐயா அரியமுத்து அவர்கள் இறந்த நிகழ்வினை விட இவர்கள் தானமாக கொடுத்த இந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் கவர்ந்து ஒரு நிசப்தமான அமைதி மனதில் நிலவச் செய்து அனைவரின் கவனத்தையும் உற்றுநோக்க செய்தது. இது எங்களுக்கும், அவர்களோடு பயணிக்கும் சக நண்பர்களுக்கும் மட்டுமல்ல சக மனிதர்களுக்கும் இதுஒரு முன் உதாரணமாக அமையும் வாழ்வின் பொருளினை கற்பிக்கும் ஒரு நிகழ்வான சம்பவமாக இது திகழ்கிறது.

எந்த ஒரு செயல்களையும் நாம் வார்த்தைகளால் எழுதிவிடலாம் வர்ணித்து விடலாம் ஆனால் அவ்விடத்தில் நாம் பயணித்து அந்த இருக்கையில் அமர்ந்து பார்த்தால் மட்டுமே அந்த வலியும் அந்த வேதனையும் நாம் உணரமுடியும் வார்த்தைகளால் வர்ணித்து விடவோ எழுதிவிட முடியாது. அந்த வலிகளையும் அந்த காயங்களையும், அதனால் இந்த நிகழ்வினை வெறும் பாராட்டுதல் ஆக அனைவரும் பாராட்டி விட்டு சென்று விடமுடியாது சென்றுவிடக்கூடாது. இந்நிகழ்வினை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நம்முடைய வாழ்விலும் நாம் இவற்றினை கடைபிடிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்