மூடாத பாதாள சாக்கடை குழி-போனது வாலிபர் உயிர்

0
250

திருப்பூரில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்த நபர் பரிதாபமாக இறந்து போனார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வி.கே நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டிக்கான வேலைகள் அனைத்து பகுதியிலும் நடந்து வருவதால் பாதாள சாக்கடைகள் ஆங்காங்கே திறந்த நிலையில் போடப்பட்டு மூடப்படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் அவ்வழியே சென்ற நபர் ஒருவர் இரவுநேரத்தில் இருட்டில் திறந்து இருந்த பாதாளசாக்கடை குழியை கவனிக்காமல் அதற்குள் தவறுதலாக காலை வைத்து இடறி உள்ளே விழுந்து விட்டார்.

உள்ளே விழுந்த நபரை மீட்டு தூக்குவதற்கு நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை. அவர் குழிக்குள் விழுந்து கிடப்பதை யாரும் பார்க்கவும் இல்லை. அதனால் காப்பாற்ற ஆளின்றி தவித்த அவர் உள்ளே பரிதாபமாக இறந்து போனார்.

மறுநாள் காலை அவ்வழியாக சென்ற மக்கள் குழிக்குள் அவரது உடல் தெரிவதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததால் விரைந்து வந்த இறந்துபோன நபரின் உடலை மீட்டு எடுத்தனர். பின் அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்பொழுது அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் தக்க இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்காங்கே போர்வெல் குழிகள் திறந்து போடப்பட்டு அதில் குழந்தைகள் விழுந்து இறந்து பரபரப்பாக பேசப்பட்டு பின்பாக அந்த குழிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது பாதாள சாக்கடைக் குழிக்குள் வாலிபர் விழுந்து இறந்து போனது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றினை அஜாக்கிரதையாக விட்டதன் விளைவாக ஒரு உயிர் விரையமாக போய்விட்டது . இனியாவது கவனமுடன் செயல்பட்டு திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழிகள் மற்றும் ஏனைய குழிகளை மூடி பொதுமக்களின் உயிர்களை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெ.சூர்யா,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்