வெளிநாட்டில் பதுங்கியுள்ள வைர வியாபாரி சோக்சியின் 100 ஏக்கர் பினாமி நிலங்கள்: வருமான வரித் துறையிடம் ஒப்படைப்பு

0
52

புதுடெல்லி: மெகுல் சோக்சியின் 100 ஏக்கர் பினாமி சொத்தை வருமானத் துறையிடம் ஒப்படைக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி. இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பி விட்டனர். அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை பெற்றுத் தர, சிபிஐ தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. நீரவ் மோடி தற்போது லண்டனில் இருக்கிறார். ஆன்டிகுவா பர்புடா நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளதால், சோக்சி இந்த நாட்டில் வசித்து வருகிறார். இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை சிபிஐ தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள நீரவ் மோடி, சோக்சியின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், நகைகள் போன்றவற்றை வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் ஏற்கனவே முடக்கி வைத்துள்ளன. மேலும், இவர்கள் பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துகளும் மீட்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி கிராமத்தில் சோக்சிக்கு பல்வேறு இடங்களில் 100 ஏக்கர் பினாமி நிலம் உள்ளது. ‘நாசிக் மல்டி சர்வீசஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ள இந்த நிலங்களுக்கு சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இந்த நிலத்தை பறிமுதல் செய்வதற்காக தீர்ப்பாய ஆணையத்தில் வருமான வரித்துறை 2 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்தது. நாசிக் மல்டி சர்வீசஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்களோ, சோக்சியை சேர்ந்தவர்களோ இதை எதிர்த்து வழக்கை நடத்தவில்லை. இதனால், வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 100 ஏக்கர் நிலத்தையும் பினாமி சொத்துகள் பறிமுதல் சட்டம் -2016ன்படி வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கும்படி தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.70 கோடி. இதுபோன்ற மோசடி வழக்குகளில் வருமான வரி்த்துறையே நேரடியாக வழக்கு தொடர்ந்து பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. இந்த சொத்துகள் விரைவில் ஏலத்தில் விடப்பட்டு, அந்த பணம் அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்