அபுதாபியில் ரூ.3500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.. இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா !

0
236

!

சென்னை : அபுதாபியில் ரூ.3500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24ம் தேதி மாலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து துபாய் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.கடந்த மூன்று நாட்கள் துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அபுதாபி புறப்பட்டு சென்றார். அபுதாபியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று காலை அபுதாபியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாட்டில் தொழில்தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார். தமிழகத்தில் தொழில் தொடங்க சிறப்பான சூழல் உள்ளதாகவும், அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட உள்ளதாகவும் அப்போது கூறினார். இந்த மாநாட்டில் ரூ.3500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அபுதாபியைச் சேர்ந்த லுலு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையடுத்து, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசு சார்பில், ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’ அமைத்து, அதற்கு தேவையான நிதி வழங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் – அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வருக்கு அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியில் இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்