அதிரடி வேட்டை தொடரும்; கூலிப்படை ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: டிஜிபி சைலேந்திரபாபு உறுதி

0
192

தென்மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து 4 மாவட்ட எஸ்பிக்களுடன் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இதில் தென்மண்டல ஐஜி அன்பு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, எஸ்பிக்கள் நெல்லை மணிவண்ணன், தூத்துக்குடி ஜெயக்குமார், தென்காசி கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 2 ஆயிரத்து 512 ரவுடிகளை கைது செய்துள்ளனர். கூலிப்படையினர் மற்றும் பழிக்குப்பழியாக கொலைகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடும் கும்பலை கண்காணிப்பதற்கும், கைது செய்வதற்கும் மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நெல்லை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பழிக்குப்பழியான கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொலை வழக்குகளில் கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர, நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்த தனிப்படை அமைக்கப்படும். போலீசின் அதிரடி வேட்டை தொடரும் என்றார்.

முன்னதாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிஜிபி தலைமையில் நடந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்