கஞ்சாபோதை மாணவர்களால் சென்னையில் கூட்டுப் பாலியலுக்கு ஆளான எட்டாம் வகுப்பு மாணவி

0
279

சென்னையில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவ மாணவர் உள்பட உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாணவிகளை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
சென்னையை அடுத்துள்ள ராமாவரத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக, பள்ளியின் ஆசிரியை ஒருவர், மாணவியின் பாட்டியிடம் விசாரித்துள்ளார். மாணவியும் உடல்நலம் குன்றிய நிலையில் இருப்பதைக் கவனித்து விசாரித்தபோதுதான் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த மாணவிக்கு பல் மருத்துவம் படிக்கும் நாகர்கோயிலை சேர்ந்த வசந்த்கிரிஷ் என்ற மாணவர், போதைப் பொருளை அதிகளவில் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது நண்பர்களான சினிமா துணை நடிகரான பாலசிவாஜி என்ற ரஞ்சித், கல்லூரி மாணவர் விஷால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் பிரசன்னா என நான்கு பேர், மாணவியை போதை மருந்தைக் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கைதான மருத்துவ மாணவர், விரிவுரையாளர்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பாட்டியும் ஆசிரியையும் வடபழனி உதவி காவல் ஆணையர் பாலமுருகனின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த வழக்கை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகளிர் போலீஸாரின் விசாரணையில், ராமாவரத்தில் வசந்தி கிரிஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்தே மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதான நான்கு பேர் மீதும் போக்சோ உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள்: அரசு செய்ய வேண்டியது என்ன?
போதை ஊசிகள் வியாபாரம்: கோவை இளைஞர்கள் இலக்காவது எப்படி?
அதேநேரம், இந்த விவகாரத்தில் மூன்று மாணவிகளுக்குத் தொடர்பிருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாணவர் வசந்த் கிரிஷின் காதலி மூலமாக பள்ளி மாணவிக்கு வலைவிரிக்கப்பட்டதாகவும் பள்ளி மாணவி தினமும் பானிபூரி சாப்பிட கடைக்கு வரும்போது இயல்பாக அவரிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கலில் மூன்று மாணவிகள்?
இதன்பிறகு வசந்த் கிரிஷின் வீட்டில் மாணவிக்கு போதை மருந்துகளைக் கொடுத்து தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமையில் இந்த கும்பல் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ பதிவை மாணவி ஒருவர் வைத்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தில் அவர் உள்பட மூன்று மாணவிகளுக்குத் தொடர்பிருப்பதால் அவர்களை காவல்துறை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிலும், பள்ளி மாணவிக்குப் பெரிதாக பின்புலம் இல்லாதது, பெற்றோர் பிரிந்திருப்பது ஆகியவற்றைக் கவனித்த பிறகே அவரைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கில் கைதான கும்பல் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதேநேரம், கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பயன்பாடு என்பது அதிகரித்தபடியே உள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளிகளுக்கு மது அருந்திவிட்டு வருவது, பள்ளி வளாகங்களில் கஞ்சா பயன்படுத்துவது போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிறுவர் கைகளில் போதைப் பொருள்கள் ஏன்?

கல்வி நிலையங்களின் அருகில் போதைப்

பொருள் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

இருப்பினும், கஞ்சா உள்பட போதைப் பயன்பாடுகளும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் போவதும் மேற்கண்ட குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

“தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விற்பனை நடைபெறவில்லை என யாரும் கூற முடியாது. கோவை, நெல்லை, சென்னை எனப் பரவலாக விற்பனையாகிறது. இது குழந்தைகள் கையிலும் கிடைக்கிறது. சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் வறட்சி உள்பட உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களும் இருக்கின்றன. அவர்களுக்கான அன்பு நிறைந்த சூழல்களும் இல்லை. இதுபோன்ற நேரத்தில் அவர்களுக்கான துணிச்சலை போதை தருகிறது. இது அவர்களுக்கு ஒரு கருவியாகவும் உள்ளது” என்கிறார், மதுரை எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல் கொலையைச் செய்யும் அளவுக்குச் செல்கிறார்கள். பொதுவெளியில் அவர்களால் கஞ்சாவை புகைக்க முடிகிறது. இவ்வாறு நடக்கும் விற்பனைகள் எல்லாம் காவல்துறைக்கும் நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டில் போதைப் பொருளே கிடையாது என காவல்துறையால் அறிக்கை கொடுக்க முடியுமா? ஏதோ ஒரு அரசியல் பின்னணி இல்லாமல் இந்த விற்பனை நடக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு பகுதிவாரியாக சிலரின் துணையோடுதான் விற்பனை நடக்கிறது” என்கிறார்.

தொடரும் குற்றச் சம்பவங்கள்
மேலும், “மதுரையில் அண்மையில் நடந்த கொலை ஒன்றில், கோவிலின் முன்பு கஞ்சா புகைத்துக் கொண்டு பெரிய கத்தியால் கேக் வெட்டியை கும்பலை இளைஞர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அந்த நபரைக் கொன்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் 17 முதல் 24 வயதுக்குள்தான் இருக்கும். இந்தச் சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்கிறார்.

“மதுவும் புகையும் தீமை என அறிவுரை மட்டும் சொன்னால் போதாது. 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மது குடிக்கும் சூழல் நிலவுகிறது. மதுவை அருந்துவதில் எந்தவித பாலின பாகுபாடும் இருப்பதில்லை. தென்மாவட்டத்தில் ஆசிரியரை, மாணவர் ஒருவர் கத்தியை எடுத்துக் குத்திய சம்பவமும் நடந்தது. அந்த மாணவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. வளர் இளம் பருவதில் அதீத முரட்டுத்தனத்தையும் இந்தப் போதை தருகிறது.

Can You Get Addicted to Marijuana?

போதை ஒழிப்பு என்ற ஒன்றை நூறு சதவீதம் போர்க்கால அடிப்படையில் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. போதை ஒழிப்பு தொடர்பாக டி.ஜி.பி வெளியிடக் கூடிய சுற்றறிக்கையால் என்ன பலன்? குழந்தைகள் கைகளில் போதைப் பொருள் இருப்பது என்பது மிகப் பெரிய சமூகக் குற்றம். டாஸ்மாக் மது விற்பனை என்பது சட்டரீதியானது. கஞ்சா என்பது சட்டவிரோதமானது. ஆனால், அதனை விற்க வேண்டும் என்று வந்தால் அது குழந்தைகளின் கைகளில் சென்று சேருவதைத் தடுக்க முடியாது. எங்காவது பள்ளிகளுக்குச் சென்று அதிகாரிகள் முழுமையாக ஆய்வு நடத்தியுள்ளார்களா? போதைப் பொருள்களை விற்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதில் கடுமை காட்டப்பட வேண்டும். அரசு கடுமையான காட்டினால் மட்டுமே போதையால் ஏற்படும் குற்றங்களைக் களைய முடியும்” என்கிறார்.

காவல்துறை சொல்வது என்ன?
“பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பயன்பாடு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்ன?” என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி டாக்டர் சுதாகரிடம் கூறியதாவது, “ போதை பொருள் விற்பனையைத் தடுப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வாட்ஸ்அப் குழு அமைத்து எங்களுக்கு வரக் கூடிய தகவல்களை சரிபார்ப்பது, தகவல் சொல்லும் நபர்களை ஊக்குவிப்பது, தன்னார்வலர்களையும் குழுக்களில் இணைப்பது தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்” என்கிறார்.

மேலும், “டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு இயங்குகிறது. ஒவ்வோர் பள்ளி நிர்வாகத்தையும் குழுவில் சேர்த்துள்ளோம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் குற்றப் பிரிவு போலீஸார் மறைமுக கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்க முடியும். அதனால் ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்கிறார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்