பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட பென்னட் உயிரிழந்ததார்

0
153

பால்டிமோர்: அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாண்டில் வசிப்பவர் டேவிட் பென்னட் (57). இதய நோயாளியான இவரது உயிரை காப்பாற்ற மாற்று இதயம் பொருத்த வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவராக பென்னட் இருந்தார். இதனால், இவரின் உயிரை காப்பாற்ற, பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பென்னட்டுக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடந்தது. பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயத்தை டாக்டர்கள் அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். பன்றியின் இதயம் மனித உடலில் செயல்படும் வகையில் அதில் சில மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. பன்றி இதயத்தின் உயிரணுக்களில் உள்ள சர்க்கரையை அகற்றினர். இதுவே, அதிகவேக உறுப்பு நிராகரிப்புக்கு காரணமாகும். மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து பென்னட் உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு இதய நுரையீரல் இயந்திரம் பொருத்தப்பட்ட போதிலும், பென்னட் புதிய இதயத்தின் மூலமாக சுயமாக சுவாசித்துக் கொண்டிருப்பதாக டாக்டர்கள்கூறினர். இது மருத்துவ உலகின் வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது. இருப்பினும் பென்னட், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நேற்று டேவிட் பென்னட் உயிரிழந்ததாக மேரிலாண்ட் மருத்து மையம் தெரிவித்தது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்