இடதுபுறத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும்: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

0
419

பேருந்துகளில் தொலைதூர பயணங்களின்போது பயணிகள் உணவருந்தும் வகையில் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள், இரண்டு அல்லது மூன்று இடங்களில், உணவகங்கள் முன்பு நின்று செல்வது வழக்கமாகவுள்ளது.

இதில் சில ஓட்டுநர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவகங்களை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலையில், எதிர்புறமுள்ள உணவகங்களுக்கு பேருந்துகளை திருப்பி செல்கின்றனர்.

இதனால் சிலசமயங்களில், விபத்துகளும் நடக்கின்றன. இதுகுறித்து பயணிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் போக்குவரத்துத்துறைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் அரசு விரைவு பேருந்தின் கிளைமேலாளர்கள், மற்றும் கோட்டமேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அரசு விரைவு பேருந்துகள், பயணத்தின்போது பயணிக்கும் திசையின் இடதுபுறங்களிலுள்ள உணவகங்களில் மட்டுமே பயணிகள் உணவு அருந்த நின்றுச்செல்ல வேண்டும்’.

இடதுபுறம் நிற்காமல், எதிர்திசையிலுள்ள உணவகத்திற்கு வாகனத்தை திருப்பும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே கட்டாயம் பேருந்துகளை இடதுபுறமுள்ள உணவகத்தில்தான் நிறுத்திட வேண்டும். இதை மீறும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்; இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்