தமிழகம் முழுவதும் இன்று அட்சய திரிதியை கொண்டாட்டம்; நகைக்கடைகளில் நிரம்பிவழியும் கூட்டம்.

0
70

சென்னை: அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நகைக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதல் நகைக்கடைகளில் ஆர்வமுடன் வந்து பொதுமக்கள் நகைகளை வாங்கி சென்றனர். சென்னையில் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்சயதிரிதியை முன்னிட்டு 30% வரை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திரிதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இதன்படி இந்தாண்டு அட்சய திரிதியை இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

மேலும், நகைக்கடைகள் அதிகம் உள்ள பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திரிதியை கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டு வழக்கமான நிலைக்கு மக்கள் வந்துள்ளனர். இதையொட்டி கொரோனாவுக்கு முந்தைய காலங்களை போல விற்பனை அதிகரிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் கருதுகின்றனர். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களுக்கு பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது. கிராமுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை தள்ளுபடி.

முன்பதிவு செய்யும் போது என்ன விலை விற்றதோ, அந்த விலைக்கு தங்கம் விற்பனை, தங்க நகை வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே வந்து அழைத்து செல்ல வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் இன்று காலை முதல் வந்து நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. சென்னையை பொறுத்தவரை நகை வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கடைகளின் நுழைவு வாயிலின் முன்பாக வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டாக அட்சய திரிதியை கொண்டாடப்படவில்லை. 2 ஆண்டுக்கு பிறகு இன்று அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இதனால், மக்கள் ஆர்வமுடன் காலையில் இருந்து நகைகளை வாங்கி வருகின்றனர். வாடிக்கையாளர் வருகையை பொறுத்து நள்ளிரவு வரை கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை நகைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அட்சயதிரிதியை முன்னிட்டு சென்னையில் மட்டும் சுமார் 6,000 கிலோவுக்கு மேல் தங்கம் விற்பனையாக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்