நெல்லையில் இரு பிரிவை சேர்ந்த பொதுமக்களுக்கு சமூக நல்லிணக்க ஆலோசனை கூட்டம்

0
207
நெல்லையில் இரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்களுக்கு சமூக நல்லிணக்கம் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் வருவாய் துறையினர் முன்னிலையில் இன்று நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் தருவை,மேலச்செவல்,கொத்தன்குளம், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த இரு தரப்பினரை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களை நேரில் அழைத்து சமூக நல்லிணக்கம் ஒற்றுமை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., தலைமையில், உதவி ஆட்சியர் திரு. சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொதுமக்களுக்கு ஆலோசனைக் கூட்டம் கோபாலசமுத்திரம் நம்பி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

அப்போது உதவி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு நல்ல அறிவுரைகளை பெரியோர்கள் நீங்கள் வழங்க வேண்டும் எனவும் விளக்கி கூறினார்கள்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் சமூகத்தின் ஒற்றுமையை பேணுதல் குறித்தும் ஜாதி ரீதியான உயர்வு தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும் எனவும், சமூக வேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகளையும் அதனால் ஒரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்து தெளிவாக இந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்ரமணியன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்