பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி துர்காவிற்குப் பாராட்டுவிழா

0
110

2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த குறும்பூர் அருகே உள்ள குருகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி துர்காவிற்கு நெல்லை கட்டபொம்மன் நகரில் உள்ள “அறிவுச்சுடர்” ஐயா ப.அரியமுத்து அறக்கட்டளை
சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாட்டு கல்வி வரலாற்றிலேயே முதல் முறையாக பொதுத் தேர்வில் தமிழில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி செ.துர்கா மேற்படிப்பில் வேளாண்மைத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.


செல்வி செ.துர்கா, தமிழ்வழிக் கல்வி மீது மக்கள் நம்பிக்கைக் கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ்வழிக் கல்வி சிறப்பான வழிகாட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழர்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் மாணவி துர்காவிற்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் மாணவியின் கல்வித் திறமையை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக நெல்லை கட்டபொம்மன் நகரில் உள்ள “அறிவுச்சுடர்” ஐயா ப.அரியமுத்து அறக்கட்டளை சார்பாக செல்வி துர்காவிற்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

மாணவியின் பெற்றோர் முன்னிலையில் அவருக்கு அறக்கட்டளை சார்பாக ஊக்கத் தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மாணவி துர்காவின் மேற்படிப்பிற்கு அறக்கட்டளை சார்பாகத் தேவையான அனைத்து உதவியும் செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு “அறிவுச்சுடர்” ஐயா ப.அரியமுத்து அறக்கட்டளையின் தலைவரும், பகுத்தறிவாளருமான வீரமணி அரியமுத்து முன்னிலை வகித்தார். கல்வியாளர், முனைவர். குணசேகர் அரியமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் அ.வியனரசு தலைமைத் தாங்கினார். மாவட்டத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் மயன். இரமேசு குமார் பாராட்டுரை ஆற்றியதோடு ஊக்கத் தொகையும் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் தோழர் கண்மணி மாவீரன், தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் லிங்கராஜ், மாநில கூட்டுறவுப் பிரிவு செயலாளர் மாரி துரைசாமி , பாஜக நிர்வாகிகள் அருமைராஜ், பிரபாகரன் , எழுத்தாளர் கனிராஜ் , திமுக பிரமுகர் முருகன் மற்றும் மாணவியின் தந்தை செல்வகுமார் , தாய் ஹேமா உட்பட பலர் கலந்து கொண்டு மாணவி செ.துர்காவிற்கு பட்டாடைகள் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்