10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களைப் பாராட்டி “கல்வியாளர் முனைவர்”.குணசேகர் அரியமுத்து வாழ்த்து அறிக்கை

0
69

நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களைப் பாராட்டி “கல்வியாளர் முனைவர்”.குணசேகர் அரியமுத்து வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலை கொள்ளாமல் இருக்க சில வழிமுறைகளையும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை பின்வருமாறு
தனது வாழ்க்கையின் முதற்கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து விட வேண்டும் என்ற பெரும் கனவோடு எதிர்காலத்தில் தாம் என்னவாக ஆக வேண்டும் என்ற இலக்குகளை மனதில் கொண்டு கடின முயற்சியாலும், பெரும் கவனத்தோடும் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்ற 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” என்ற குரளுக்கு இலக்கணமாக ஒருவன் வாழ்வில் எந்தளவிற்குக் கல்வியைக் கற்கின்றானோ அந்தளவிற்கு அவனது அறிவாற்றலானது அதிகரிக்கின்றது. அந்த மகத்தான அறிவை அவனுக்குத் தடையின்றி வழங்குவதற்கு பள்ளிகளுக்கு நிகரான ஒரு இடம் இவ்வுலகில் இல்லை.

அந்த வகையில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவமாகப் பள்ளிப் பருவம் அமைகிறது. பள்ளிகள் நமக்கு வெறும் பாடங்களை மட்டுமே கற்பிப்பதில்லை. வாழ்க்கையில் நாம் என்ன செய்தால் என்னவாக ஆக முடியும் என்ற வாழ்க்கைப் பாடத்தையும் நமக்குக் கற்றுத் தருகின்றன. நமது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளின் பூங்காவாகவும் பள்ளிகள் விளங்குகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்கள் அப்பூங்காவின் மலர்களாக இன்புற நிறைந்திருக்கிறார்கள்.

அப்பள்ளியில் தனது அடுத்த நிலைக்காக மாணவர்கள் எழுதும் தேர்வுகளானது அவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. அந்தத் தேர்வுதான் அவர்களை சிறந்த மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆட்சியாளர்களாகவும், அறிஞர்களாகவும், மேதைகளாகவும், ஆசிரியர்களாகவும் , தொழிலதிபர்களாவும் மாற்றும் வல்லமையைப் பெற்றுள்ளது.

இதன்பின் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு துறையிலும் அவர்கள் பெரும் சாதனையாளர்களாக உருவெடுத்து அவர்களின் செயல்கள் யாவும் இந்நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு மகத்தான சேவையாக அமைய வேண்டும் என நான் உளமார வேண்டுகிறேன். கடினமான சில சூழல்கள் காரணமாக தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் துவண்டு விடக் கூடாது. ஏனெனில் தோல்வியே வெற்றியின் முதற்படி என்பதை இத்தேர்வில் தேர்ச்சியடையாத ஒவ்வொரு மாணவனும் மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் மாணவர்களுக்கு தேர்வில் மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு எந்த இடத்தில நாம் பிழை செய்தோம் எனத் தெளிவாக ஆராய்ந்து, அதை சரிசெய்து, மறு தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைய மனப்பூர்வமாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்