கரையை கடக்கிறது ஜாவத்- தமிழக மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

0
149


வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘ஜாவத்’ புயல், இன்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நெருங்கி, நாளை ஒடிசாவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழக மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது.

இதற்கு, சவுதி அரேபியாவால் வழங்கப்பட்ட ‘ஜாவத்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரபி மொழியில் ஜாவத் என்றால், கருணை மற்றும் பெருந்தன்மை என்று பொருள். இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள முதல் புயல் ஜாவத். இந்த புயல் நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே, 360 கிலோ மீட்டர்
துாரத்தில் இருந்து, மணிக்கு 22 கி.மீ., வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.இன்று காலையில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கும். பின், வடக்கு திசையில் திரும்பி, ஒடிசாவின் புரி அருகே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.புயல் கரையை நெருங்குவதால், ஆந்திரா, ஒடிசாவின் கடலோர பகுதிகளில், இன்று அதிகாலை முதல் சூறாவளி காற்றுடன் மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மீட்பு படைகள் தயார்

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், புரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களுக்கு, நாளை கன மழை மற்றும் சூறாவளி காற்று வீசுவதற்கான ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.புயல் நகரும் பகுதிகளில், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு கொந்தளிக்கும்; அலைகள் சீற்றத்துடன் காணப்படும்; மணிக்கு 90 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது.அதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், மத்திய மேற்கு, ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதிகளுக்கு, இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, பாம்பன், துாத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ஆந்திரா முதல், கோல்கட்டா வரை கடற்பகுதிகளில் நின்றிருந்த 300க்கும் மேற்பட்ட படகுகளும், அதிலிருந்த மீனவர்களும், கடலோர காவல் படையினரால் நேற்று பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் மீட்பு படையினரும் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில், 64 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்துக்கு பனி மூட்டம்

தமிழக வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக தென் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும்; நாளை சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்; மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.வரும் 6ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். 7ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்; 6, 7ம் தேதிகளில், கடலோரம் அல்லாத இதர மாவட்டங்களின் சில இடங்களில், அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ரயில்கள் ரத்து

ஜாவத் புயலால் மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், சந்திரகாசிக்கு நாளை இயக்கப்பட வேண்டிய ‘சூப்பர் பாஸ்ட்’ ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக திருச்சிக்கும்; சாலிமாரில் இருந்து பெரம்பூர் வழியாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கும் நாளை இயக்கப்பட வேண்டிய சூப்பர் பாஸ்ட் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய காற்றழுத்தம்

நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இரண்டு நாட்களாக பகலில் வெயிலும், இரவில் லேசான குளிரும் நிலவுகிறது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதனால், தென் மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீண்ட கால கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்