“நெல்லையில் பட்டியல் மாற்ற மாநாடு” – “முனைவர்.குணசேகர்” தலைமையேற்பு.

0
176

‘தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் பட்டியல் மாற்ற இயக்கத்தின்’ சார்பாக நெல்லை கொக்கிரக்குளத்தில் இன்று ‘பட்டியல் மாற்ற மாநாடு’ நடத்தப்பட்டது. மாநாட்டைத் தலைமை தாங்கிய “கல்வியாளரும் , தேவேந்திர குல வேளாளர் கலாச்சார மையம் என்ற அமைப்பின் தலைவருமான முனைவர். குணசேகர்” , தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து பிசி பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையைப் பிறப்பிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசுக்கு முன்வைத்து உரையாற்றினார்.

உலகத்திற்கே நெல் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்து உலக மக்களுக்கு உணவளித்த, உயர் பண்பாட்டு நெறிமுறைகளையுடைய , மூத்த தமிழ்க் குடியான “தேவேந்திர குல வேளாளர்” சமூக மக்களை கடந்த 70 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் யாவும் வெறும் வாக்குகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அரசியலிலும் , உட்கட்சி உயர் பதவிகளிலும் இதுவரை இச்சமூக மக்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும், முக்கியத்துவமும் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் அரசானது மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியில் கூட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த தகுதியுள்ள எவருக்கும் மேயர் பதவியைக் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.மேலும் தேவேந்திர குல வேளாளர் சமூக பிரமுகர்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் உயர் மரியாதை கூட தாய் நாட்டில் கிடைக்காத சூழல் நிலவுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

” இப்படி தமிழக அரசியல் கட்சிகளால் வெரும் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இச்சமூகம் தலைநிமிர ஒரே வழி, எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேறுவதே” எனவும் அதற்கான முயற்சிகளில் உலகம் முழுவதும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் ஒன்றிணைந்து வெற்றி காண வேண்டும் எனவும் முனைவர் குணசேகர் வலியுறுத்தினார்.”தமிழக அரசியலிலும் அரசு உயர் பதவிகளிலும் இச் சமூகத்திற்கு முறையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனில் பட்டியல் மாற்றம் ஒன்றே அதற்குத் தீர்வு” எனவும் இம்மாநாட்டின் மூலம் அவர் தெளிவுபடுத்தினார்.

ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட இம்மாநாட்டில் அறிஞர். கலை வேந்தன், , பேராசிரியர் .ஞானசேகரன், ஓய்வுபெற்ற ஐஆர்எஸ், ஐஏஎஸ் அதிகாரிகளான ம. கிருஷ்ணசாமி, மா. விஜயகுமார், இரா. ச. சுபாசினி மள்ளத்தி, எழுத்தாளர் .தமிழ் மாறன், ஐ. நந்தினி மள்ளத்தி உள்ளிட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வி.தமிழ்நெறி,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்