Thursday, January 27, 2022

தேவேந்திர சேனா சார்பில் பொதுமக்களுக்கு இந்திரவிழா வாழ்த்துக்கள்.

தேவேந்திர சேனா மாநில துணைத் தலைவர் கல்வியாளர், முனைவர் அ.குணசேகர் அவர்கள் பொதுமக்களுக்கு இந்திரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தென்பொதிகை செய்திக்கு அளித்த பேட்டியில், சங்ககாலத்தில் இருந்து இன்று வரை இந்திர விழா விவசாய பெருங்குடி மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இவ்விழா 28 நாட்கள் கொண்டாடப்படும், மக்களின் வாழ்க்கை மாற்றத்தின் காரணமாக போகி பண்டிகை என்ற பெயரில் தற்போது கொண்டாடப்படுகிறது. இந்திரவிழா கொண்டாடியதன் நோக்கமே மழையின் கடவுளான இந்திரனை வணங்கி உழவுத் தொழிலுக்குத் தேவையான மழையை வேண்டிப் பெறுவது ஆகும். பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளமும் (மழையும் செல்வமும்) பெருக என இந்திரனைவேண்டிக்கொண்டு அனைவருக்கும் இந்திரவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறாக தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

*************************************

இந்திரவிழா தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

இந்திர விழா தேவர்களின் தலைவனான இந்திரனைச் சிறப்பிக்க எடுக்கப்பட்ட விழாவாகும்.பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளமும் (மழையும் செல்வமும்) பெருக இந்திரனை வேண்டி நிகழ்த்தப்பட்ட பெருவிழாவாகும்.இந்நாளை “தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்” என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். இந்திரவிழா கொண்டாடியதன் நோக்கமே மழையின் கடவுளான இந்திரனை வணங்கி உழவுத் தொழிலுக்குத் தேவையான மழையை வேண்டிப் பெறுவது ஆகும். மருத நிலத்தின் தெய்வமான வேந்தனை (இந்திரனை), அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதான இளவேனில் பருவத்தில் வழபடுவதற்கு எடுக்கப்பட்ட விழா இந்திரவிழா ஆகும். “பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர்.” இவ்விழா சித்திரை மாதம் பெளர்ணமி நாளில் நடைபெற்றிருப்பதாகச் சிலப்பதிகாரக் கதை கூறுகிறது.

சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள்.

(சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதை, 64)

பொருள்: சித்திரை மாதத்துச் சித்திரைநாளிலே நிறைமதி சேர்ந்ததாக அந்நாளிலே (இந்திரவிழா எடுக்கப்பட்டது).

சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் கணுவெழுந்த பொன்மூங்கில் தண்டு நட்டு இந்திரவிழாவுக்கான கால்கோள் நிகழ்த்தப்பட்ட செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது.

சங்க காலத்தில் இந்திர வழிபாடு

இந்திர வழிபாடு மற்றும் இந்திர விழா எடுக்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடையே நிலவிய செய்தியினைப் பற்றிக் குறிப்பிடும் ஒரே எட்டுத்தொகை நூல் ஐங்குறுநூறு ஆகும்.

இந்திர விழாவின் பூவின் அன்ன,
புன்தலைப் பேடை வரி நிழல் அகவும்,
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே?

(ஐங்குறுநூறு 62; மருதம், கிழத்தி கூற்றுப் பத்து)

மலரைப் போன்று சிவந்த தலையைக் கொண்ட பெண் மயில், தரையின் மீது வரிவரியாக விழுந்துள்ள நிழலில் அமர்ந்து அகவுகின்ற ஊர் இதுவாகும்.

இவ்வூரில் இந்திர விழா நடைபெற்றபோது உன்னுடைய தேர் முழுவதுமாகப் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இவ்வாறு எல்லாப் பெண்களையும் ஒருசேர அழைத்துக் கொண்டு போய்க் களியாட்டம் ஆடிவிட்டு அமைதியாகத் திரும்பி வந்துள்ளாய்.. அது போகட்டும், இப்போது உன்னுடைய அந்தத் தேர் எங்கே?

இந்திரவிழா, கரிகால வளவன் ஆட்சிகாலத்தில், சங்ககாலச் சோழர்களின் துறைமுகப் பட்டினமாகத்திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில், விமரிசையாகக் கொண்டாடப்பட்ட செய்தியினைச் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவு ஊர் எடுத்த காதையும், கடலாடு காதையும் மணிமேகலையில் விழாவறை காதையும் விவரிக்கின்றன.

வேந்தன் மருத நிலத்தின் கடவுளாகச் சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகிறான். மருதநிலத்தில் வாழ்ந்த உழவர் குடிமக்கள் வேந்தனைத் தமது கடவுளாக ஏற்று வணங்கினர். வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும்.

இந்திரனுடைய ஆயுதமான வச்சிராயுதத்தை முன்னிறுத்தி வச்சிரக்கோட்டம் அமைத்து இந்திர வழிபாட்டை நடத்திய செய்தியை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூற்றுப் பாடலில் 241 தெரிவித்துள்ளார்.

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்

(புறநானூறு 241: 3, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் அண்டிரனைப் பாடியது)

இந்திரர் அமிழ்தம் (புறநானூறு 182);, ஆயிரங்கண்ணோன் (கலித்தொகை 105), வச்சிரத்தான் (பரிபாடல் 18), ஐயிருநூற்று மெய் நயனத்தவன் (பரிபாடல் 9), இடியேற்றை உடையவன் (பரிபாடல் 8), ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென (பரிபாடல் 8), வானவில்லை வில்லாகக் கொண்டவன் (பரிபாடல் 28), திருக்கினர் செல்வன் (திருமுருகாற்றுப்படை 159) ஆகிய இந்திரன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

வேதகாலத்தில் சித்தரிக்கப்படும் இந்திரன்

பின்னாளில் வேந்தன் என்னும் மருத நிலத்துக் கடவுளுடன் இந்திரன் (Sanskrit: इन्द्र) என்ற வேதகாலத்துக் கடவுளை இணைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பண்டைய வேத மதத்தில் இந்திரன் மிக முக்கியமான தெய்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திரனுக்குப் பல பெயர்கள் உள்ளன. (பகுப்பு:இந்திரனின் பிற பெயர்கள்) இந்திரன் நான்கு நீண்ட கரங்களைக்கொண்டவன். ஐராவதம் என்ற வெள்ளை யானையைத் தன் ஊர்தியாகக்கொண்டவன். ததீசி என்ற முனிவருடைய முதுகுத்தண்டினையே வசசிராயுதம் என்ற பெயரில் பயன்படுத்தி வருபவன். கிழக்குத்திசையினைக் காப்பவன் (திக் பாலகன்).

இந்திரனின் தந்தை மரிச்சி முனிவரின் மகனாகிய காஷ்யப முனிவர் ஆவார், அதிதி இந்திரனின் தாய்; இவனுடைய மனைவி இந்திராணி . இவள், இந்திரனின் சக்தியும் ஆவாள். இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு.

இவன் ரிக்வேத வேதத்தின் ஒப்புயர்வற்ற தேவனாகப் (கடவுளாகப் ) போற்றப்பட்டான் புயல்கள் மற்றும் போரின் கடவுள் (god of storms and war) என்று அழைக்கப்பட்ட இவன் வானிலை ( weather), மழை (rain), இடி (thunder), மின்னல் (lightening) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினான். புயல்களுடன் தொடர்புடையவன் என்பதாலேயே இவனைப் போருடனும் (War) தொடர்புபடுத்தினர். எனவே போருக்குச் செல்வதற்கு முன்பு ஆரியர்கள் இந்திரனுக்குப் பலி கொடுத்துத் திருப்திப்படுத்தியுள்ளனர். போருக்குச் செல்வதற்கு முன்பு போதை தரும் சோமபானத்தை அருந்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தவன் இந்திரன். இந்தப் பானம் இவனது தெய்வீக சக்திகளை மேம்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்திரன். பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை குடித்த தேவர்களில் இந்திரன் முதன்மையானவன். வேத மந்திரங்களினால் வேள்விகள் வளர்த்து தேவர்களுக்குப் படைக்கப்படும் அவியினை (ஹவிஸை), இந்திரனே, எல்லாத் தேவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறான்.

ரிக்வேதத்தில், ‘இந்திரன்’ என்பவன் எங்கும் பரவி நிற்பவனாகவும், மிகுந்த சக்திவாய்ந்தவனாகவும், நித்தியமானவனாகவும், பரந்த அண்டத்தை ஒளிரச்செய்து நிலை நிறுத்தவல்ல( ( Kshara-Virat) ‘அக்ஷரா ஆத்மனாகவும் ’ வருணிக்கப்படுகிறான்

பௌத்த சமண மதங்களில் இந்திரன்

பௌத்த மதத்தில் மகாயானப்பிரிவில் வஜ்ரபாணி என்னும் கடவுள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. புத்தருடன் இருக்கும் காவல் தெய்வம் வஜ்ரபாணி ஆவான். வஜ்ராயுதம் ஏந்திய வஜ்ரதாரா என்ற கடவுள் பற்றிய குறிப்பும் இம்மதத்தில் உண்டு.

சமண மதத்தில் இந்திரன் சவுதர்மகல்பா (Saudharmakalpa) என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த சொர்க்கத்தின் அரசன். ஜீயஸ் (Zeus), பண்டைய கிரேக்க மதத்தின் கடவுள்களுள் முதன்மை தெய்வம் ஆவான். இவன் வானத்தின் (Sky) கடவுளும் ஒலிம்பிய கடவுள்களின் அரசனுமாவான். இடியேறு (Thunderbolt) என்ற ஆயுதத்தை ஏந்தியவன் ஆவான்.எனவே இந்திரனும் ஜீயஸும் ஆய்வாலர்களால் ஒப்பிடப்படுவதுண்டு.

இந்திர விழவு

காவிரிபூம்பட்டினத்தில் இந்திர விழா கொண்டாட்டங்கள் எவ்வாறு தோன்றின என்று மணிமேகலை,விழாவறை காதை குறிப்பிடுகிறது.

ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
‘மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக’ என

(மணிமேகலை விழாவறை காதை 3-7)

தமிழ் முனிவர் அகத்தியர் காவிரிபூம்பட்டினத்தை வளமுடைய நகராக மாற்ற எண்ணினார். இந்திரனின் மனம் குளிரும் விதமாக இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்குமாறு, சோழ நாட்டு அரசனாகிய தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனுக்கு அறிவுரை் கூறினார். இப்படி விழவு எடுத்தால் இந்திரன் இந்த நகருக்கு வேண்டிய மழையைத் தருவான் என்றார்.

கடைச்சங்கத்திற்கும் முன்னவனான தொடித்தோட் செம்பியன் அகத்தியரின் அறிவுரையை ஏற்று இந்திர விழவைச் சிறப்புடன் நடத்தினான். எனவே செம்பியன் காலத்திருந்தே கொண்டாப்பட்ட செய்தி இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

சோழனின் வாரிசுகளும் இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத்தொடங்கிய நாள் முதலாக இருபத்தெட்டு நாட்களுக்கும் புகார் நகரத்திலேயே வந்து தங்கியிருந்தனர்.

முசுகுந்தன் என்ற சோழ மன்னன் இந்திரன் என்ற பேரரசனுக்குப் போரில் செய்த உதவியினால் அவனுடைய நன் மதிப்பினைப் பெற்றான். இதன் காரணமாக இந்திரன் முசுகுந்த சோழனுக்கு மெய்க்காவல் புரிவதற்கு வலிய பூதம் ஒன்றை அனுப்பினான். இப்பூதம் காவிரிபூம்பட்டினம் சென்று மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய இரு பகுதிகட்கும் இடையே இருந்த நாளங்காடியில் தங்கி தனது பணியை ஆற்றி வந்தது. இந்திரவிழா நடைபெறாது கைவிடப்பட்டால் இப்பூதம் சினம் கொண்டு துன்பம் விளைவிக்கும் என்பது காவிரிபூம்பட்டினத்து மக்களிடையே நிலவிய நம்பிக்கையாகும்.

வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமா னேவலிற் போந்த
காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப

(சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் 5. இந்திரவிழவூரெடுத்த காதை 65-67)

ஒரு காலத்தில் சோழமன்னன் நெடுமுடிக்கிள்ளியால் இந்திர விழாவினைக் கொண்டாட முடியவில்லை. நெடுமுடிக்கிள்ளி தன் குழந்தையைத் தவற விட்டுவிட்டு குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தால் இந்திரவிழா கொண்டாடுவதைக் கைவிட்டதாக மணிமேகலை குறிப்பிடுகிறது.

சிலப்பதிகார காலத்திற்கும் மணிமேகலை காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோளால் காவிரிபூம்பட்டினம் அழிந்திருக்கின்றது. இந்திரவிழா கைவிடப்பட்டதால் இந்திரன் சினமுற்று விடுத்த சாபமே கடற்கோளாக எழுந்து காவிரிபூம்பட்டினத்தை அழித்ததாக அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறுகின்றார்.

நெடுங்கோட் செம்பியன் ஆட்சியில் இந்திர விழவு கொண்டாட்டங்கள் 28 நாட்களுக்கு நடைபெற்ற செய்தியினை மணிமேகலை தெரிவிக்கின்றது. இந்திர விழாவினை நடத்துவதற்குச் சமயக் கணக்கர், காலம் கணிக்கும் சோதிடர், மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்), பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்தனர்.

சமயக் கணக்கரும்;தந்துறை போகிய
அமயக் கணக்கரும்; அகலா ராகிக்
கரந்துரு எய்திய கடவுளாளரும்

(மணிமேகலை விழாவறை காதை 13–16)

காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள ஐந்து வகை மன்றங்களிலும் வழிபாடு செய்துவிட்டுக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த முரசை எடுத்து அரசனுடைய யானையின் கழுத்திலே ஏற்றினர்., வாளேந்திய வீரர்கள், தேர்ப்படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து சென்றனர். இந்திர விழா தொடங்கும் நாள், முடியும் நாள் ஆகியவற்றை முரசறைந்து வள்ளுவன் நகர மக்களுக்குத் தெரிவித்தான்.

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்

(மணிமேகலை விழாவறை காதை 70–72)

விழாத் தொடங்கும்போது கற்பகத்தருக் கோட்டத்தில் உள்ள ஐராவதம் என்னும் யானையின் உருவம் வரையப்பட்ட கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து, தருநிலைக் கோட்டத்தில் வானுயர உயர்த்திக் கால்கோள் விழா செய்தனர். கால்கோள் விழாவே இந்திரவிழாவின் தொடக்க நாள் ஆகும். கடைநிலை என்பது விழாவின் முடிவுநாள் ஆகும். தொடக்கநாளில் கொடியேற்றி, முடிவுநாளில் கொடியிறக்கி விழாவை நிறைவு செய்வர்.

விழாவிற்கான கால்கோள் விழாவின்போது புகார் நகரின் வீதி தோறும் வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டன. நெடுநிலை மாளிகை வாயில்களை முத்துக்களால் ஆன மகரவாசிகை, தோரணங்கள், பூரணக் கும்பம், பொலிந்த பாலிகைகள், பாவை விளக்கு, தூமயிர்க்கவரி, சுந்தரச் சுண்ணம் போன்ற மங்கலப்பொருள் கொண்டு அலங்கரித்தனர். இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றைக் கட்டினார்கள். வீதிகளிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணலைப் பரப்பினார்கள்.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் நிறைந்த நெடுவிதிகளில் ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தினர், அரசகுமாரர், பரதக் குமாரர்(வணிகர்) குதிரைப்படை வீரர்கள், யானைப்படையினர், தேர்ப்படையினர் ஆகியோர் ஒனறு; சேர்ந்து அரசனின் கொற்றம் மேலும் மேலும் மேம்படுவதற்கு வாழ்த்திச் சென்றனர்.

ஊர்ப் பொதுவிடங்களில், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றினார்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த சிறந்த தத்துவங்களைப் பட்டி மண்டபத்தில் எடுத்துக் கூறி வாதிட்டார்கள். வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலாவினார்கள். தங்குவதற்காக, ”மூதூர்ப் பொழில்” என்ற சிறப்பிடம் அமைக்கப்பட்டிருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. அந்த இடத்திற்கு „இளவந்திகை‟ என்ற பெயரும் இருந்திருக்கின்றது.

மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய இரு பகுதிகளில் இருந்து வீரர்கள் இங்கு வந்து விழா எடுத்துப் பலியும் தந்தனர். இந்திர விழாவுக்கு வந்தவர்கள் சோழ மன்னன் திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபத்தைக் கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு சோழர்கள் காலங்களில் இந்திரனால் அளிக்கப்பட்ட ‘வெள்ளிடை மன்றம்,’ ‘இலஞ்சிமன்றம்,’ ‘நெடுங்கல்நின்ற மண்டபம்,’ ‘பூத சதுக்கம்,’ ‘பாவை மன்றம்’ ஆகிய ஐம்பெரும் மன்றங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

ஐம்பெரும் குழுவினரும், எண்பேராயத்தினரும், அரசகுமரரும், வணிக இளைஞரும் அவர்களுக்குரிய தேர்களில் சென்று “அரசன் வெற்றி கொள்வானாக” என்ற வாழ்த்தினைக் கூறியபடி இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்தினர். குறுநில மன்னர்கள், காவிரி நீர் கொண்டு வந்து இந்திரனை நீராட்டுவித்தனர். இந்த நீராட்டு விழா இந்திர விழாவில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாகும்.

இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்தில் இருந்த சிவபெருமான் கோவில் முதல் சதுக்கப் பூதம் ஈறாக உள்ள கோவில்களில் வழிபாடு நடத்தினார்கள். சிவன், முருகன், பலராமன், திருமால் ஆகிய தெய்வங்கள் உறையும் கோவில்களில் அந்தந்த மரபுப்படி பூசைகள் செய்யப்பட்டன. தேவர்களுக்கும், பதினெண் பூதகணங்களுக்கும் விழா எடுத்துச் சிறப்பிக்கப்பட்டது. அறச்சாலைகள் விழாக்கோலம் பூண்டன. சிறைப்பட்ட பகை மன்னர்கள் பலரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வீதிகள் தோறும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. தெருக்களில் கணிகையர் நடமாடினர்.

இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மக்கள் தம் குடும்ப உறுப்பினர்களுடன் கடலில் மூழ்கிக்குளித்த பின்னர் இந்திர விழா முடிவுறும்.

பங்குனி முயக்கம்

காவிரிபூம்பட்டினத்தில் சித்திரை முழுநிலவு நாளன்று நடைபெற்ற கடல் நீராட்டு விழா இந்திர விழா என்னும் பெயரைப்பெற்றிருந்தது போல உறையூரில் நடைபெற்ற காவிரி நதி நீராட்டு விழா பங்குனி முயக்கம் (பங்குனி உத்திர விழா) என்று பெயர் பெற்றிருந்தது.

உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகநானூறு.137:8-9)

பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரிப் பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற தருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி முயக்கம் நடைபெறும்.

மதுரையிலும் பங்குனி முயக்கம் வில்விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டுள்ளது. மதுரைக் காண்டம் ஊர் காண் காதையில் மதுரை நகரில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்

(சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் 4. ஊர் காண் காதை 111-112)

பொருள்: காமனது கொடிய வில் வெற்றி பொருந்திய விழாவினைக் காணும் பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலம்.

மதுரை நகரம் இந்திரனுடன் தொடர்புடையது. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து இந்திரன், சோமசுந்தரேஸ்வரருக்காக இந்திர விமானம் அமைத்ததாகக் கூறப்படுகிறது சோமசுந்தரேஸ்வரர் கருவறை விமானத்தை எட்டு யானைகள் (அஷ்ட கஜங்கள்) தங்கிப்பிடித்துள்ளன.

ஆதித்த சோழன் பள்ளிப்படையில் இந்திரவிழா

கோதண்டராமேஸ்வரா என்னும் ஆதித்தீஸ்வரா அல்லது ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் இம்மன்னன் கி.பி. 907 ஆம் ஆண்டுப் புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இங்கு வந்தபோது இறந்துவிட்டான்.

இக்கோவிலில் முதலாம் பராந்தக சோழனின் விரிவான 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. (South Indian Inscriptions Vol. VIII, No. 529 (A.R. No. 230 of 1903). மகாவிரதி வாகிஸ்வர பட்டாரர் என்பவர் மேற்பர்வையிலிருந்த இக்கோவிலில் இந்திரவிழா எடுப்பதற்கான செலவினங்களுக்காக 105 கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.4 கிராம்) பொன்னையும் 4000 காடி (தூணி) நெல்லையும் வைப்பு நிதியாக (Deposit fund) கோவில் கருவூலத்தில் செலுத்தி அதில் வரும் பொலிசைக்காக (வட்டி) 1000 காடி நெல்லை கோவிலுக்கு அளிக்க வேண்டும் என்ற ஏற்பாடு இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.. (பார்வை: முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்)

இந்திரவிழா இன்று

நாகபட்டிணம் மாவட்டம் பூம்புகார் (காவிரிபூம்பட்டினம்) கொற்றவை பந்தலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்திரவிழா தொடங்கி, ஒரு வாரம் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் இவ்விழா மூன்று நாட்களுக்குச் சுருங்கியது. இந்த மூன்று நாட்களுக்குப் பட்டிமன்றம், பாட்டுமன்றம், இலக்கியச் சொற்பொழிவு, சிலப்பதிகார நாடகம் ஆகியவை நடைபெறுவதுண்டு. சுற்றுலாத் துறையினர் இதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்திரனின் வழித்தோன்றல்களாக கருதப்படும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் இந்திரவிழாவை இன்றும் தங்களது பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இலங்கை நாட்டின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெறும் 15 ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழாவையே இந்திர விழாவாக ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமி அன்று காலங்காலமாக கொண்டாடி வருகிறார்கள். இலங்கையில் வேறு எங்கும் இதுபோல கொண்டாடுவது இல்லை.

Related Articles

2 கருத்துக்கள்

  1. மேலவெள்ளூர் ஆ. அருண்பாண்டியன் குடும்பனார்

    சமுக சேவையில் தொடர்ந்து ,சமரசமின்றி செயலாற்றி வரும் தேவேந்திர சேனாவின் துணை தலைவர் “முனைவர் குணசேகர் அய்யா” அவர்களுக்கு DKV IT Wing சார்பாக நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல சேவையை சமுகத்திற்கு ஆற்றிட வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் .

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles