உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக உக்ரைனில் கல்விக்காகவும் வேலைக்காகவும் தங்கியிருந்த வெளிநாட்டினர் அந்நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளில் கடும் இன்னல்களைச் சந்தித்தனர். மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக உக்ரைனில் தங்கியிருந்த இந்திய மாணவர்களை “ஆப்பரேஷன் கங்கா” என்ற பெயரில் கடும் இன்னல்களுக்கு இடையே மத்திய அரசு மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வந்தது. “மாணவர்கள் உட்பட இதுவரை மொத்தம் 22,500 பேர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது”.
இந்நிலையில் தாய் நாடு திரும்பியுள்ள மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ள நிலையில், இது நாடெங்கும் பெரும்விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை பெரும் விவாதமாக்கினர். இதற்கு பதிலளித்த “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்களின் எதிர்காலக் கல்வியைத் தொடர்வதற்கான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்”.

இதுகுறித்து “கல்வியாளர் முனைவர் அ.குணசேகர்” அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பண வசதி உள்ள குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் படிக்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க ஏற்ற நாடுகளைதான் தேர்ந்தெடுப்பார்கள். அதனால்தான் பெரும்பாலான இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கூட அவர்களது மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. எனவே “அவர்கள் எதிர்காலக் கல்வியைத் தொடர தற்போது உள்ள சூழ்நிலையில் பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய ஆசிய நாடுகள்தான் மற்ற நாடுகளைவிட உகந்ததாக உள்ளது எனவும், அங்கும் மருத்துவக் கல்விச் செலவு மிகவும் குறைவாக உள்ளதாகவும், மாணவர்கள் ஆங்கில மொழியிலேயே மருத்துவப் படிப்பைத் தொடரலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியத் தட்பவெப்ப சூழல்தான் பிலிப்பைன்சிலும் நிலவுவதாகவும் உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் பிலிப்பைன்ஸ்,மலேசியா ஆகிய நாடுகள்தான் மாணவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். அண்மையில் “பிலிப்பைன்சில் உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் மேலும் மருத்துவப் படிப்பைத் தொடர மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் உதவி செய்யத் தயார்” என அறிவித்து இருந்ததையும் முனைவர் அ.குணசேகர் மேற்கோள் காட்டியுள்ளார்.
தமிழ்,
நெல்லை.