பொதுமக்களுக்கு இ-பாஸ்போர்ட் அறிமுகம்: பலன்கள் என்னென்ன?

0
149

இந்தியர்கள் வேலைவாய்ப்பு, உயர் கல்வி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்வோர் அதிகரித்துள்ளது. இதற்காக விசா, இமிக்ரேஷன் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. வெளிநாட்டில் இறங்கிய பிறகும் விமானநிலையங்களில் உள்ள இமிக்ரேஷன் கவுன்ட்டர்களில் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.

இந்த பிரச்சினைகள், துறை செயலருக்கு நிகரானப் பதவி வகிக்கும் அரசு உயர் அதிகாரிகள், மத்திய வெளியுறத் துறையினர்,முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. இதற்கு அவர்களுக்கு என தனியாக சிறப்பு வசதிகளுடன் டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஒ) விதிகளின்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தவிர மற்ற அனைத்து நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்நிலையில், கைரேகை ஆதாரத்துடன் கூடியசிப் உள்ளடக்கிய இ பாஸ்போர்ட் அறிமுகமாகிறது.

இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கியநாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதனால், அவர்கள்செல்ல விரும்பும் குறிப்பிட்ட வெளிநாடுகளில் விசா பெறுவதும் சுலபமாகி விடும். இதற்காக அவர்கள் அந்நாட்டின் தூதரகங்களுக்கு நேரில் சென்று பல மணி நேரம் காத்திருக்கவும் தேவையில்லை.

இதுகுறித்து மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘2022-2023-ல் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட எதிர்காலத் தொழில்நுட்பத்துடன் இ பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இதனால், வெளிநாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் பயணங்கள் வசதியாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார். தற்போதைய பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி, நிரந்தர, தற்காலிக விலாசங்கள் மற்றும் பெற்றோர் விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஆதார் எண்கள் கூட இடம்பெறுவது இல்லை. இதனால், ஒரே நபர் முதல் பாஸ்போர்ட்டை மறைத்து இரண்டாவதாக வேறு பெயரில் ஒன்றை பெறுவது நிகழ்கிறது. ஒருவரது விவரங்களை திருடி மற்றொருவர் போலியாக பாஸ்போர்ட் பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவாகின்றன. இந்த பிரச்சினைகள் புதிய இ பாஸ்போர்ட்டில் எழாமல் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் நாசிக்கிலுள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் தயாராக உள்ளது.

இராமநாதபுரம் தொகுதி மக்களவை எம்.பி.யும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் கொறடாவுமான கே.நவாஸ் கனி கூறும்போது, ‘‘துபாய் உள்ளிட்டபல நாடுகளை போல் இந்தியாவின் பொதுமக்களுக்கும் இ பாஸ்போர்ட் வழங்குவது வசதியானது. இதன்மூலம், பயணம் செய்பவர்களால் விமான நிலையங்களில் நெரிசலை தவிர்க்கலாம். துபாய்போன்ற பல நாட்டு விமான நிலையங்களில் உள்ள இ கேட்நுழைவு உள்ளிட்ட சில வசதிகளையும் இ பாஸ்போர்ட்டினருக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும்’’ என்றார்.

ஆ. அருண்பாண்டியன்,
மதுரை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்