நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு
முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்*

0
160

இம்பால்:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு
முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளது.
மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம்.
மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது.
இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.
அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம்
வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் தமங்ளாங் மாவட்டம் ரானி கைடின்லியு
ரயில் நிலையத்துக்கு முதல் முறையாக 27-ம் தேதி சரக்கு ரயில் சென்றடைந்தது.
அப்போது உள்ளூர் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் மாநிலத்துடனான
தொடர்பு மேம்படும். அம்மாநிலத்தின் வர்த்தகம் ஊக்கம் பெறும். அம்மாநிலத்தின்
அற்புதமான பொருட்கள் நாடு முழுவதும் பயணிக்கும்” என பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ட்விட்டரில், “வடகிழக்கு மாநில மக்களின் சமூக
பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ரயில்வே கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்தும் பணிகள் பிரதமர் மோடியின் கண்காணிப்பில் நடைபெறுகிறது” என பதிவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஜிரிபம் முதல்இம்பால் வரையிலான 111 கி.மீ. தூரத்துக்கு
புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில்
அமையும் இந்த ரயில் வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள், 153 மேம்பாலங்கள் அமைகின்றன.

இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான (141 மீட்டர்)
ரயில்வே மேம்பாலம் நோனே மாவட்டத்தில் அமைகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்
ஒரு பகுதியான ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்குதான்
சரக்கு ரயில் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை,
ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்