சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – உறவினருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை -நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

0
159

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் உறவினருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் உறவினரான முருகேசன் என்பவருக்கு இத் தண்டனையானது வழங்கப்பட்டுள்ளது”. கடந்த 2020ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அச்சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் “முருகேசன் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது”. முருகேசன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முருகேசன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் , 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வி. தமிழ்நெறி,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்