ஆஸ்பெட்டாஸ் அபாயம் இழப்பீடாக பல லட்சங்கள் அதை வழிப்பறி செய்யும் ஆசாமிகள் ?

0
216

கோயம்புத்தூர் போத்தனூரில் செயல்பட்டு வரும் ஆஸ்பெட்டாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து, புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும், 16 லட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கான காசோலையை வைத்துக் கொண்டு, இடைத்தரகர்கள் பேரம் பேசுவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் பகுதியில் 1953 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை லண்டனைச் சேர்ந்தவர்களின் நிர்வாகத்தில் ஆஸ்பெட்டாஸ் என்ற பெயரில் இயக்கப்பட்ட ஆஸ்ப்ர்ட்டாஸ் சிமெண்டு கூரைகள் தயாரிக்கும் நிறுவனத்தால் தற்போதுவரை 464 பேர்கள் புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக இழப்பீடு பெறுவோர் மூலம் அதிகாரப் பூர்வமாக தெரியவந்துள்ளது.

அந்த நிறுவனத்தை விற்றுவிட்டு, அதன் உரிமையாளர்கள் லண்டன் சென்றுவிட்ட நிலையிலும், தங்களிடம் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலையை சுற்றிவசித்த பலருக்கு ஆஸ்பெட்டாஸ் நுண்துகள்களால் ஆஸ்துமா மற்றும் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்ததை அறிந்த அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘டர்னர் நீ வாழ்’ என்னும் அறக்கட்டளை மூலம் இழப்பீடு வழங்கி வருகிறது.

இழப்பீடு வழங்குவதற்கான கோரிக்கையைப் பரிசீலிக்க, அறக்கட்டளை சார்பில் கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணநேந்து முகர்ஜி என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில், தனக்கு தமிழ் தெரியாததால், அஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனில்குமார், கிருஷ்ணசாமி, தேவா ஆகியோரை வைத்து பாதிப்படைந்த பழைய தொழிலாளர்களுக்கு 2013 ஆம் ஆண்டு முதல் இழப்பீடு வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் பலர் போலியாக இழப்பீடு பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டுவரை பணியில் இருந்த தொழிலாளர்கள் பலருக்கு இப்படி ஒரு இழப்பீடு வழங்கப்பட்டு வருவதே 2019 ஆண்டு தான் தெரியவந்துள்ளது.

அதில் முதற்கட்டமாக 300 பேர் அந்த அறக்கட்டளை மூலம் தங்கள் புற்றுநோயின் பாதிப்புக்கு ஏற்றவாறு 5 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற்றதாக கூறப்படும் நிலையில், அப்படி இழப்பீடு கோரும் நபர்களிடம் இழப்பீட்டு பணத்தில் இடைத்தரகர்கள் கமிஷன் பெற்றுக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது 115 காசோலைகள் அந்த 3 இடைத்தரகர்களிடம் இருப்பதாகவும், கமிஷனுக்காக 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இழப்பீட்டு காசோலையை தரமறுப்பதாகவும் நோயால் பாதிப்புக்குள்ளானோர் தெரிவித்துள்ளனர்.

காசோலையை கையில் வைத்திருப்பதாக கூறப்படும் அனில்குமார், கிருஷ்ணசாமி மற்றும் தேவா ஆகியோர், 10 சதவீத கமிஷன் கொடுத்தால் மட்டுமே காசோலையைத் தருவோம் என மிரட்டி வருவதாக சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள்மீதான புகார் குறித்து காசோலைகளை வைத்திருக்கும் அனில்குமார், கிருஷ்ணசாமி ஆகியோர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்டு தொழிற்சாலை மூலம் கேன்சர் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், தற்போது குஜராத்தைச் சேர்ந்த நிறுவனத்தினரால் எவரெஸ்ட் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பெயரில் இந்த மேற்கூரை தயாரிக்கும் கம்பெனி தடையின்றி நடத்தப்பட்டு வருகின்றது.

கேரளாவில் வீடுகளுக்கு மேற்கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்துவதே புற்று நோயை உண்டாக்கும் என்று 1998 ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்