இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..!

0
144

(28-01-2022)

மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியமாகும். இதன்மூலம் பிராந்திய பாதுகாப்பு, வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்தார். அப்போது முதல் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானுடனான உறவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 5 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அவ்வப்போது சந்தித்துப் பேசி பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். கடந்த டிசம்பரில் டெல்லியில் மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இந்தியா, மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் “உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாகத் மிர்ஜியோவ், துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்தேமுகமது, கஜகஸ்தான் அதிபர் காஸ்யம் ஜோமார்ட் டோகோயெவ், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜாபாரோவ், தஜிகிஸ்தான் அதிபர் எமமாலி ரஹ்மான்” ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது. வரும் காலத்தில் இருதரப்பு உறவு மேலும் வலுவடையும். இதன்மூலம் இந்தியா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் கனவுகள் நனவாக்கப்படும்.

இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் கஜகஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. குஜராத் அரசுக்கும் உஸ்பெகிஸ்தான் அரசுக்கும் இடையேயான பொருளாதார உறவு வலுவடைந்து வருகிறது.

கல்வி, ஆராய்ச்சியில் இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் கல்வி பயின்று வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் தஜிகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக வலுவான உறவு நீடிக்கிறது. துர்க்மெனிஸ்தானுக்கும் இந்தி யாவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இதன் மூலம் பிராந்திய பாதுகாப்பு, வளர்ச்சி உறுதி செய்யப்படும். வெளியுறவு கொள்கையில் மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் நிலைமை கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஆ.அருண்பாண்டியன்,
மதுரை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்