ரஷ்யா உக்ரைன் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழப்பு.

0
204

ரஷ்யா உக்ரைன் போரின் ஆறாவது நாளான இன்று உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரத்தைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கார்கிவ் நகரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கட்டடத்தை ரஷ்யா ஏவுகணையால் தாக்கும் சிசிடிவி வீடியோவை உக்ரைன் அரசு சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் கார்கிவ் நகரத்தில் ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இன்று காலையில் ஆங்காங்கே சூப்பர் மார்க்கெட்டுகளும் குடிநீர் இயந்திரங்களும் செயல்பாட்டில் இருந்த நிலை மாறி தற்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்யப் படைகளின் தொடர் வான்வழித் தாக்குதலில் கார்கிவ் நகரின் பல கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை பலத்த சேதம் அடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

இந்த தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தற்போது செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த “நவீன்” என்ற மாணவன் மருத்துவப் படிப்புக்காக கார்கிவ் நகரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்நகரைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் கார்கிவ் மீது கண்மூடித்தனமானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நவீன் என்ற மாணவன் ரஷ்யத் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் கார்கிவ் நகரை விட்டு வெளியேற ரயில் நிலையம் செல்லும் போது அங்கு ரஷ்யப் படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உக்ரைன் அரசையும், ரஷ்யா அரசையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்