ஐபிஎல் 2022: சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி, கோட்டை விட்ட தருணங்கள்

0
257

ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு இது ஒரு மோசமான நாளாக இருக்கக்கூடும். சொதப்பலான பேட்டிங்கால் நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்திருக்கிறது சி.எஸ்.கே. மொயின் அலி, ஜடேஜா, பிராவோ என 3 நட்சத்திர வீரர்களை டக் அவுட் செய்து பந்துவீச்சில் மிரட்டியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் முதல் முறையாக டாஸ் வென்ற உற்சாகத்தில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார் ஜடேஜா. பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் முதல் பந்தையே பவுன்டரிக்கு விளாச, அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

மின்னல் வேக ரன் அவுட்
சிக்சருடன் களத்தை அச்சுறுத்திய பனுகா ராஜபக்சாவை மின்னல் வேக ரன் அவுட் மூலம் வெளியேற்றினார் எம்.எஸ்.தோனி. பவர் பிளேயில் 2 முக்கிய விக்கெட்களை இழந்து திணறியது பஞ்சாப். சென்னைக்கு சாதகமாக ஆட்டம் மாறத் தொடங்கிய நேரத்தில்தான், தடுமாறிக் கொண்டிருந்த பஞ்சாப்பை தனது அதிரடியான பேட்டிங்கால் தூக்கி நிறுத்தினார் லிவிங்ஸ்டன். அத்தோடு 27 பந்துகளில் அரைசதத்தையும் பதிவு செய்தார்.

அசராமல் ரன் குவித்த பஞ்சாப்
மறுமுனையில் தவான் நிதானம் காட்டினார். இருவரும் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டிற்கு 95 ரன்கள் விளாசினர். தவான் 33 பந்துகளில் ஆட்டமிழக்க, 32 பந்துகளில் 5 பவுன்டரி 5 சிக்சர் என 60 ரன்களுடன் விடைபெற்றார் லிவிங்ஸ்டன். தனது பங்கிற்கு ஜித்தேஷ் ஷர்மா 26 ரன்கள் சேர்க்க பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது.

ஏமாற்றிய தொடக்க வீரர்கள்
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சி.எஸ்.கே. ருத்துராஜ் கெய்க்வாட் வழக்கம்போல 1 ரன்னில் ஏமாற்றினார். நல்ல தொடக்கம் அமையாதது சென்னையின் சறுக்கலுக்கு முதல் காரணமாக அமைந்தது. பவர் பிளேயிலேயே 4 விக்கெட்களை இழந்தது சென்னை அணி. சி.எஸ்.கேவின் டாப் ஆர்டர்கள் பஞ்சாப் வேகத்திற்கு சீட்டுக்கட்டுகளை போல சரிந்தனர்.

கேட்ச்கள் – வெற்றியை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜடேஜா, மொயின் அலி, பிராவோ டக் அவுட். தனி ஆளாக போராடிய சென்னை வீரர் ஷிவம் துபே 57 ரன்களும் தோனி 23 ரன்களும் விளாசினர். பஞ்சாப் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு சி.எஸ்.கே. 16வது ஓவரிலேயே சரணடைந்தது. பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சிஎஸ்கே தொடர் தோல்வி
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி கண்டுள்ள ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

போட்டி முடிந்ததும் பேசிய ஜடேஜா, ”பவர்பிளேயில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். முதல் பந்தில் இருந்தே எங்களிடம் சரியான வேகம் இல்லை.

வலுவாக மீண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும். கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் நன்றாக வருவார் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

முதல் வெற்றிக்கு

கடந்த முறை பந்துவீச்சில் சொதப்பிய சென்னை அணி இந்த முறை ஓரளவு நேர்த்தியாக பந்து வீசியிருந்தாலும் பேட்டிங்கில் கோட்டைவிட்டிருக்கிறது. பேட்டிங் – பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் சென்னை அணி கம்பேக் கொடுத்தால் மட்டுமே முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும்.

பெ. சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்