கொரோனாவுக்கு பிறகு மீளும் ஐடி நிறுவனங்கள் ; வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சி

0
134

கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் கம்பெனி மூடப்பட்டதால் வேலையை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதே நேரத்தில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்தே வேலைகளை செய்தனர். ஒரு கம்ப்யூட்டரும், இண்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும்… வீட்டில் இருந்தே வேலைசெய்து விடலாம் என்பதால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ‘ஒர்க் பிரம் ஹோம்’ என்ற அடிப்படையில் வீடுகளில் இருந்தே பணியை செய்தனர். நாளடைவில் இதுவே ஐ.டி. நிறுவன ஊழியர்களின் அடையாளமாகவும் மாறிப்போனது.

கொரோனா பரவல் குறைய… குறைய… நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களும் வழக்கம்போல் தங்களது அலுவலக பணிகளை தொடர்ந்தன. ஆனால் ஐ.டி. நிறுவனங்களோ வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறையை உடனடியாக மாற்றவில்லை.

அலுவலக பராமரிப்பு செலவுகளில் தொடங்கி மின்கட்டணம், அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற அனைத்துவிதமான செலவுகளும் ‘ஒர்க் பிரம் ஹோம்’ பணியில் மிச்சமாயின. அதே நேரத்தில் கூடுதல் நேரம் வகையில் ஊழியர்களை வேலை வாங்கவும் முடிந்தது. வீட்டில் இருந்துதானே பணிபுரிகிறோம் என்ற எண்ணத்தில் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் பலரும் 15 மணி நேரம் வகையிலும் வேலை செய்துள்ளனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக டிசர்ட், சார்ட்ஸ் அணிந்தபடியே வீடுகளில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பணி செய்தனர்.

இதன் மூலம் அவர்களுக்கு பயணச்செலவு… தினசரி ஆடைகளுக்கான சலவை செலவு உள்ளிட்டவைகளும் மிச்சமானது. இதுதொடர்பாக ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘நான் டிப்-டாப் ஆக உடை அணிந்து வேலைக்கு சென்று பல மாதங்கள் கடந்துவிட்டது. வீட்டில் இருந்து பணியாற்றுவதில் சில ‘சுகங்கள்’ இருந்தாலும் சுமைகளும் அதிகமாகவே இருந்தன என்று தெரிவித்தார். வேலை செய்துகொண்டு இருக்கும்போது, மனைவியோ… அல்லது வீட்டில் இருப்பவர்களோ கூப்பிட்டால் வேலையில் இருந்து கவனம் சிதறும் நிலையும் காணப்பட்டது.

இது ஒருபுறம் இருந்த போதிலும் ஐ.டி. நிறுவனத்துக்கு நேரில் சென்று நண்பர்களுடனும், தோழிகளுடனும் அரட்டை அடிப்பது…. ஊர்கதைகளை பேசுவது போன்றவையெல்லாம் ‘மிஸ்’ ஆவது இதனால் ஒரு கட்டத்தில் ‘ஒர்க் பிரம் ஹோம்’ போரடிக்க தொடங்கிவிட்டது. எப்போது மீண்டும் வேலைக்கு செல்வோம்? என்கிற மனநிலைக்கே பெரும்பாலான ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தள்ளப்பட்டிருந்தனர்’ என்றும் ஆதங்கப்பட்டார் இன்னொரு ஐ.டி. ஊழியர்.

இருப்பினும் கொரோனா 2-வது அலை, 3-வது அலை என அடுத்தடுத்த காலக்கட்டங்களில் நிகழ்ந்த பாதிப்புகளால் ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் பணியாளர்களை அலுவலகத்துக்கு நேரில் அழைக்க தயங்கும் நிலையிலேயே இருந்தன.

இந்த நிலையில் 3-வது அலை ஓய்ந்து நாடு முழுவதும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் முழுமையாக விலகியது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் அதிக அளவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஐ.டி. நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பார்த்து வீட்டில் இருந்து பணியாற்றியது போதும்’ என்று கூறியுள்ளது.

தங்கள் நிறுவன பணியாளர்கள், டீம் லீடர்கள் ஆகியோருக்கு இ-மெயில் அனுப்பியுள்ள ஐ.டி. நிறுவன தலைமை அதிகாரிகள் பணிக்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை ஏற்று சென்னை உள்பட அனைத்து பெருநகரங்களிலும் ஐ.டி. நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படத் தொடங்கி உள்ளன. சென்னையில் ஓ.எம்.ஆர். சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வரும் ஐ.டி. நிறுவனங்கள் சுறுசுறுப்படைய தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வந்த வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறை இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.கடந்த மாதம் கொரோனா 3-வது அலையின் தாக்கம் வேகமாக குறையத்தொடங்கியபோதே ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணிக்கு அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளத்தொடங்கியது. இதன்படி பல ஐ.டி. நிறுவனங்கள் முழு அளவிலும், மேலும் பல ஐ.டி. நிறுவனங்கள் பாதி அளவிலும் செயல்பட்டு வருகின்றன.

இதனால் கொரோனாவுக்கு விடை கொடுத்து ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளன. ஐ.டி. நிறுவன பணியாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இயங்கத்தொடங்கி உள்ளன. ஐ.டி. நிறுவனங்களின் செயல்பாடு காரணமாக அதன் அருகில் இயங்கி வரும் ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றில் வியாபாரமும் சூடுபிடிக்கத்தொடங்கி உள்ளது.இப்படி ஐ.டி. நிறுவனங்கள் தங்களது அலுவலக பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கும் நிலையில் கொரோனா 4-வது அலை என அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்கள் உலக நாடுகள் அதனால் மீண்டும் ஐடி நிறுவனங்கள் மூடப்படுமா என்ற அச்சத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்

பெ.சூர்யா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்