உடற்கொடையை ஊக்கப்படுத்த “குறள்நெறிச் செம்மல்” ஐயா அரியமுத்து பெயரில் அறக்கட்டளை தொடக்கம்.

0
116

நெல்லை கே.டி.சி நகரில் உடல்தானம் மற்றும் உடல்உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக மறைந்த “குறள்நெறிச் செம்மல்” ஐயா அரியமுத்து அவர்களின் பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி சமூக சேவகர் “குறள்நெறி செம்மல்” ஐயா அரியமுத்து அவர்கள் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்விக்கு தானமாக வழங்கப்பட்டது. திருக்குறளைப் பரப்புதல் , தமிழ்வளர்ச்சி , மரம் வளர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட ஐயா அரியமுத்து அவர்கள், திருக்குறளை நன்கு அறிந்து அதை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து பிறருக்கும் போதித்துள்ளார். தான் வாழும் காலத்தில் பல ஏழை எளிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமண உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பொதுநல நோக்கில் செய்துள்ளார்.

தனது தந்தையின் விருப்பத்தின் படி அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்து மக்களுக்கு செய்திட அவரது புதல்வர்களான தொழிலதிபர் வீரமணி அரியமுத்து மற்றும் கல்வியாளர் முனைவர் குணசேகர் அரியமுத்து ஆகிய இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் பலனாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் உடல்தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ் பற்றாளர்கள், எழுத்தாளர்கள், பொதுத் தொண்டாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் சாதித்த சாதனையாளர்களை சந்தித்து அவர்களை முதன்மைப்படுத்தியும் வருகின்றனர்.

சிறுவயது முதலே குழந்தைகள் திருக்குறளை பயின்று அதன் வழியில் நடக்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திருக்குறள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்று சூழலைப் பாதுகாக்கும் விதமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயலாற்றவும் தீர்மானித்து “அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளை” மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் முகாமிட்டு கனி மற்றும் நிழல் தரும் மரங்களை இலவசமாக வழங்குவதன் மூலம் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்க வைக்கவும் மற்றும் பல்வேறு பொதுசேவைகளை தங்களது மறைந்த தந்தையாரின் நினைவாக செய்துவரும் தொழிலதிபர் வீரமணி மற்றும் கல்வியாளர் முனைவர் குணர்சேகர் அவர்களின் செயல் பொதுமக்களை நெகிழ்ச்சியுற செய்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குறள்நெறிச் செம்மல் ஐயா அரியமுத்து அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழாவில் அரசியல் தலைவர்கள், நீதியரசர்கள் , தமிழ் பற்றாளர்கள், கல்வியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உடற்கொடையை வலியுறுத்திய திருவள்ளுவரின் “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற வாக்கிற்கிணங்க தனது மறைவிற்கு பிறகு உடலை தானமாக கொடுத்து திருவள்ளுவர் காட்டிய வழியிலேயே இறுதிவரை “குறள்நெறி செம்மல்” ஐயா அரியமுத்து நிலைத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்