ஓய்ந்தது தேர்தல் பரப்புரை, நாளை வாக்குப்பதிவு .

0
341

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் மிகவும் உற்சாகமாகவும் வித்தியாசமாகவும் தங்களது வாக்குறுதிகளைப் பரப்புரையின் வாயிலாக மக்களுக்கு எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் தெருத்தெருவாக சென்று தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். சாலையோரக் கடைகளில் தோசை சுட்டுக் கொடுத்து, காய்கறிகளை விற்றுக் கொடுத்து, குப்பை வண்டியை இழுத்து, பூ கட்டிக் கொடுத்து தங்களது பிரசாரத்தை தீவிரப் படுத்தி வாக்கு சேகரித்தனர். பல்வேறு நடிகை, நடிகர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர். கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர்களும் ஆட்டம் பாட்டத்துடன் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பல இளம் பெண்களும், இளைஞர்களும் பல்வேறு கட்சிகளால் வேட்பாளராக இத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவ்வாறு சட்டமன்றத் தேர்தலுக்கு நிகராக மிகவும் பரபரப்புடன் காணப்பட்ட இந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில்,நாளை 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் சூழலில் அதற்காக 31,029 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவானது தீவிரமாகக் கண்காணிக்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்