நெல்லை டவுண் சாப்டர் பள்ளி சுவர் இடிந்துவிழுந்து மூன்று மாணவர்கள் பலி.

0
349

நெல்லை டவுண் சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மூன்று இளம் மாணவர்கள் பலி. மூன்று மாணவர்கள் படுகாயம். மேலும், பல மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மோகன், பெருமாள், பாளையங்கோட்டை செயலாளர் துரை, மேலப்பாளையம் செயலாளர் குழந்தைவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை சந்தித்தனர்.

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சித்தலைவரையும் சந்தித்து பேசினர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) கட்சி மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகி இருப்பதும், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த செய்தியும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலும், பாரம்பரியமிக்க பள்ளியின் கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.

தொடர் மழையின் காரணமாக பழமையான கட்டிடங்கள் பழுதடைந்திருக்கும் என்கிற கவனமும் அக்கறையும் இல்லாத, அலட்சியப் போக்கால் இச்சம்பவம் நடந்திருக்கிறது. உடனடியாக அனைத்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடும், படுகாயமடைந்த மாணவர்களுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்