புதிய கோவிட் வைரஸ்: மிக கவனமுடன் இருக்க பிரதமர் அறிவுரை

0
431

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றமடைந்த ‘ஒமிக்ரான்’ வகை வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, இந்தியாவில் அதிகாரிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில், கோவிட் பாதிப்பு திடீரென 10 மடங்கு அதிகரித்தது. இதனையடுத்து, நடந்த ஆய்வில், கோவிட் உருமாற்றம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதற்கு ‘ஒமிக்ரான்’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. இது ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஒமிக்ரான்’ வகை வைரஸ் பரவல், இந்தியாவில் கோவிட் சூழல் மற்றும் தடுப்பூசி குறித்து, பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், இந்த ஆலோசனையில், அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, பிரதமரின் முதன்மை செயலர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், நிடி ஆயோக்கின் சுகாதாரக்குழு உறுப்பினர் டாக்டர் விகேபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது. உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல முக்கியத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒமிக்ரான் உள்ளிட்ட உருமாறிய கோவிட் வகை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு நிபுணர்கள் எடுத்துக்கூறினர். நாட்டில் உள்ள கோவிட் மாதிரிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் கூறும்போது, அச்சுறுத்தல் மிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை, விதிமுறைகளின் படி அவர்களை கண்காணிப்பதுடன், அவர்களை பரிசோதனை நடத்த வேண்டும். புதிய வகை கோவிட் காரணமாக, சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சர்வதேச பயணிகளிடம், விதிமுறைகளின்படி மரபணு மாதிரிகளை பெற்று, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

புதிய வகை கோவிட் தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில ரீதியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அதிகளவு தொற்று உறுதியாகும் பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பதுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, புதிய வகை வைரஸ் பரவாமல் தடுப்பதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்