முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”

0
57

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு 22 ஆக இருந்தது. ஆனால், நேற்று அது ஒரே நாளில் 476 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையம் வரக்கூடியவர்களுக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் முககவசம் அணியாமல் இருந்தால் விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானநிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் “நோ மாஸ்க், நோ எண்ட்ரி” என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பயணிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், பயணிகள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் குரங்கு அம்மை பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள சென்னை விமான நிலையம், மாஸ்க் அணியாமல் சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்