தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு ! 10மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கிய கிராமம் !

0
389

மதுரை ஆக:27 : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்து விட்டது.இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத தேவைகளில் மின்சாரமும் முக்கிய பங்காக உள்ளது, மின்தடை ஏற்பட்டு விட்டால் அன்றைய மனிதனுடைய நகர்வும் தடைபடும் அளவிற்கு மனித வாழ்வில் மின்சாரம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

*மதுரை அருகே மேலவெள்ளூர் கிராமத்தில் சில மாதங்களாகவே மின்வெட்டு பிரச்சினை தொடர்ந்து நிலவி வருகிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் கிராமவாசிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் இத்தைகைய மின்தடை ஏற்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அறிவிப்பு இல்லாத மின்தடையால் சிரமத்துக்கு உள்ளாகும் மக்கள், பல மணி நேர மின்தடையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நிம்மதியான தூக்கமின்றி அல்லல்படுகின்றனர்.

அறிவிப்பு இல்லாத பல மணி நேர மின்தடையால் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிப்பது என்பது கேள்விக்குறியாகிறது. இதனால் அவர்களின் கல்விக் கற்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கனமழை கால கட்டத்தில் ஏற்படும் மின்தடையை காட்டிலும் லேசான தூறலுக்கு ஏற்படும் மின்தடை தான் பல மணி நேரம் நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் பல மணி நேர மின்தடை ஏற்படுவதால் சமுக விரோத செயல்கள் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். தொடர் மின்வெட்டினை பயன்படுத்தி இந்தப் பகுதியில் ஏற்கனவே பல குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமம் அருகே தொழிற்சாலைகள் மற்றும் மில்கள் பல இயங்கி வருவதால் அங்கே மின்சாரம் தடையின்றி செல்வதற்கு இவ்வாறு செயற்கை மின்தடை ஏற்படுத்தப்படுவதாக சமுக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர் மின்வெட்டினால் சுய தொழில் மற்றும் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக பணிபுரியும் வேலைகளும் பாதிக்கப் படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பருவ மழை தொடங்கும் முன்னரே நாம் அதற்கு ஏற்றவாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மின்தடை ஏற்படும் காரணங்களை கண்டறிந்து அதனை சரிபடுத்தி மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இவ்வூர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.தமிழகமெங்கும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தும் இது போன்ற சூழல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.

மின் தடை ஏற்பட்டால் உடனடியாக புகார் அளிக்க அவசர உதவி எண்ணை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்களையும் பொதுமக்களுக்கு பரப்புவதற்காகவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிடப்படுகிறது.

* தனி நபர் மின்தடை / பொதுவான மின்தடை/அவசர அழைப்பு :

நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்