குடியரசு தின விழாவில் தமிழகத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? அண்ணாமலை விளக்கம்!

0
164

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தின நிகழ்ச்சியில் செல்லும் வாகனப் பேரணியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், மாநிலங்களிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய அரசு வட்டாரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், ‘தங்கள் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மாநில முதல்வர்கள் தரப்பிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இந்த விவகாரம் தவறுதலாக மாநிலப் பெருமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மத்திய அரசு மாநில மக்களுக்கு செய்த அவமரியாதையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

அலங்கார ஊர்தி குறித்து மோடி அரசு முடிவு செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சங்களிலிருந்து வரும் மாநில அலங்கார ஊர்திகளை கலாச்சாரம், இசை, கலை, சிலை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து இதுகுறித்து முடிவு செய்யும். வல்லுநர்கள் குழு, இந்த ஊர்தியின் அடிப்படையான கருத்தாக்கம், வடிவமைப்பு, காட்சியின் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யும்.

2022-ம் ஆண்டு குடியரசுத் தின விழாவுக்கு 56 பரிந்துரைகள் வந்தன. அதில், 21 பரிந்துரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் படைப்புகள் வல்லுநர்கள் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் வீடியோ பதிவாக விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், மத்திய அரசு குடியரசு தின அணிவகுப்புக்கு தமிழக அலங்கார ஊர்திகளை நிராகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் ஒரு வல்லுநர் குழு முடிவு செய்வது. அந்த வல்லுநர் குழுவில் கலை, இலக்கியம் என அனைத்து துறையில் இருந்து வருகின்றன நிபுணர்களும் இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் சொல்லுகிற யோசனையை வைத்து அந்த அலங்கார ஊர்தி எப்படி இருக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகின்றதோ, அதற்கு தகுந்தாற்போல் நடக்கும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வருடங்களும் குடியரசுத் தின அணிவகுப்பில் தங்களது அலங்கார ஊர்தியை இடம்பெற செய்ய முடியாது. அங்கிருக்கும் இடநெருக்கடி, பாதுகாப்பு அச்சுறுத்தல் அனைத்தும் கவனத்தில் கொண்டு,

ஒவ்வொரு வருடமும் சில மாநிலங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை, நரேந்திர மோடி அரசு வந்த பின்பு 2019, 2020, 2021 என 3 வருடம் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்துள்ளது. 2017, 2016ம் ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு இடம் கிடைத்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், நரேந்திர மோடி அரசு வந்த பின், 5 முறை தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு எந்த மாநிலங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. குறிப்பாக கேரள மாநிலத்திற்கு 2 முறை தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்படியிருக்கும் போது, இந்த வருடம் என்ன பிரச்சனை? இந்த வருடம் பாதுகாப்புத்துறை, நமது தலைமை செயலாளருக்கு குடியரசுதின அணிவகுப்பு கருத்தாக்கம் குறித்து கடிதம் எழுதியிருந்தது. 75 ஆண்டுகள் நாம் சுதந்திரம் பெற்று ஒரு நாடாக வளர்ந்துவிட்டோம், இந்த கருத்தாக்கத்தில் தங்களது ஊர்தி இருக்க வேண்டும் என்று கொடுத்திருந்தது.

தமிழகமும் நமது கருத்தாக்கத்தை கொடுத்திருந்தது. அதனை வைத்து வல்லுநர் குழு முடிவு எடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தின் கருத்தாகத்திற்காக இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. அதை தவிர்த்து, வேலுநாச்சியார், வஉசி, பாரதியாருக்கு மரியாதை கொடுக்கவில்லை, என்பதெல்லாம் கிடையாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்