நெல்லையில் பிரபல ரவுடி “நீராவி முருகன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை – போலீசாருக்கு அரிவாள் வெட்டு.

0
154

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடியான நீராவி முருகன் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன் தப்பி ஓட முயன்ற போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பழனி அருகே 40 பவுன் தங்க நகைகளை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக நீராவி முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பழனி காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையில் திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் ரவுடி நீராவி முருகனை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நெல்லை களக்காடு பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் ரவுடி நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது 3 காவலர்களையும் அவர் அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

FILE PICTURE

எனவே நீராவி முருகனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நீராவி முருகன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகமாக வழிப்பறி செய்த ரவுடியாக நீராவி முருகன் இருந்தது குறிப்பிடத்தக்கது. வழிப்பறி செய்யும் போது நகைகளை கொடுக்க மறுப்பவர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்வது இவரது வாடிக்கை. தமிழக முழுவதும் இவர் மீது 3 கொலை வழக்குகள் , 37 குற்ற வழக்குகள் மற்றும் கள்ளச்சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு என்ற ஊரில் வசித்து வந்ததால் இவர் “நீராவி முருகன்” என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்