கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை!

0
146

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரம்மராஜன் (55) என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பிச்சாண்டி மகன் சிவசிதம்பரம் என்பவர் ,வங்கி வட்டிக்கு கடன் தருவதை அறிந்து அவரிடம் பிரம்மராஜன் ரூ.3,50,000/- பணத்தை கடனாக பெற்றுள்ளார். வங்கி வட்டிக்கு கடன் கொடுத்த சிதம்பரம் பின் அதை கந்துவட்டியாக மாற்றியுள்ளார்.

அதனால் அந்தக் கந்து வட்டி கடனை அடைப்பதற்கு கடன் பெற்ற பிரம்மராஜன் ,பேரூர் பகுதியை சேர்ந்த கணபதி மகன் அருணாசலம் (45) என்பவரிடமும் ,பத்மநாபமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் பார்த்திபன் என்பவரிடமும், அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்கி, மேற்படி சிவசிதம்பரத்திடம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரம்மராஜன், சிவசிதம்பரத்திடம் வாங்கிய கடன் ரூபாய் 3,50,000/-க்கு, இதுவரை பத்து லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும், அசல் தொகையில் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கழிந்துள்ளதாகவும், மீதி பணத்தை விரைவாக தருமாறும் சிவசிதம்பரம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 02.09.2021 அன்று சிவசிதம்பரம் தனது வீட்டிற்கு அழைத்ததின்பேரில் பிரம்மராஜன் அவரது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து சிவசிதம்பரம், பிரம்மராஜனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலுமாக 9 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்து அவரது இருசக்கர வாகனத்தை பறித்து வைத்துள்ளார்.

மேலும் பார்த்திபன் மற்றும் அருணாசலம் ஆகிய இருவரும், தாங்கள் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கேட்டு பிரம்மராஜனுக்கு நெருக்கடி கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து 13ம் தேதி இரவு சிவசிதம்பரத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இருவர் பிரம்மாஜனின் வீட்டிற்கு வந்து அவரிடம் கடனை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரம்மராஜன் வர்த்தகரெட்டிபட்டி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரம்மராஜனின் மனைவி ரேவதி (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் தட்டாப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு அவர்களுக்கு எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் பேரில் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஸ்ரீவைகுண்டம் பேரூர் பகுதியை சேர்ந்த கணபதி மகன் அருணாசலம் என்பவரை கைது செய்தனர்.

மேலும் மற்ற எதிரிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கபடுவார்கள், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்