தொடரும் பாலியல் தொல்லையால் தற்கொலைகள்?

0
313

பாலியல் தொல்லை நான்தான் கடைசியா இருக்கனும், கரூரில் இன்னொரு மாணவி-பகீர் சம்பவம்
கரூர்: “பாலியல் தொல்லையால் உயிரிழப்பது நானே கடைசியாக இருக்க வேண்டும்” என கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தனக்கு பாலியல் தொல்லை தந்தவரின் பெயரை சொல்ல பயமாக இருக்கின்றது என்றும், உறவுகளிடம் சொல்லாமல் செல்வதற்காக மன்னிக்கவேண்டும் என்றும் உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மாணவி.

கரூர் அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்பி உள்ளார், பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது, இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் மாணவியிடம் சோகத்திற்கான காரணத்தை விசாரித்துள்ளார், அதற்கு மாணவி பதில் ஏதும் அளிக்கவில்லை.

தூக்கில் தொங்கிய நிலையில்

பின்னர் வீட்டிற்குள் சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று குரல் கொடுத்துள்ளார், ஆனால் மாணவி திரும்ப குரல் கொடுக்கவில்லை, பின்னர் மூதாட்டி அறைக்குள் சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தாய்க்கும், போலீசுக்கும் தகவல்

இதனால் செய்தவதறியாது முதலில் மாணவியின் தாய்க்கு தகவல் கொடுத்தார், மகள் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் வேலையிலிருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார், மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார், பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர், தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வீடு முழுவதும் சோதனை நடத்தினர், அப்போது தற்கொலைக்கு முயல்வதற்கு முன்னர் மாணவி கனத்த இதயத்துடன் எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.

இனி யாரும் சாகக்கூடாது
அதில், பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நீண்டகாலம் இந்த பூமியில் வாழ ஆசைப்பட்ட எனக்கு அதற்கு வாய்ப்பில்லாமல் பாதியிலேயே செல்வதாகவும் எழுதியிருந்தார், மேலும் தன்னை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று இந்த கடிதத்தில் தெரிவிக்க பயமாக இருக்கிறது என்றும், யாரிடமும் சொல்லாமல் செல்வதால் குடும்ப உறுப்பினர்கள் என்னை மன்னிக்குமாறும் உருக்கத்துடன் எழுதியிருந்தார்.

மாணவியின் உருக்கமான கடிதம்

மாணவி எழுதிய கடித்தில் கீழ்க்கண்ட வாசகம்தான் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது, அதில் ‘செக்சுவல் ஹராஸ்மென்ட்டால் சாகும் கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழுவதற்க்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போறேன், இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும், பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல, ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன் மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி’ என எழுதியுள்ளார்.

தீவிர விசாரணை

இந்த கடிதத்தை கைப்பற்றிய வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவியின் உறவினர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாணிவியின் செல்போனில் வந்த தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீண்டும் ஒரு சோகம்

சமீபத்தில் கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கரூரில் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் மாணவ சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்பொதிகையின் அலசல்

தற்கொலை தீர்வாகுமா? நாம் சம்பாதிக்க வேண்டும்தான் ஆனால் யாருக்காக? ஆயிரம்தான் இருந்தாலும் பெற்றோரின் கவனிப்பும் மற்றவரின் கவனிப்பும் ஈடாகுமா? முடிந்தளவு குழந்தைகளிடம் அன்பாக உற்ற தோழன்,தோழியாக நாகரிக மாற்றத்திற்கு தகுந்தாற்போல கணினி,அலைபேசி,சமூகவலைதளங்கள் இவற்றோடு பெற்றோரும் ஒன்றி இருங்கள், அவர்களை அவ்வப்போது கண்காணியுங்கள், அதிகளவு அன்பை பகிருங்கள், மனம்விட்டு பேசுங்கள், மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு அக்கறை காட்டுங்கள் அவர்கள் மீது அவர்களே போனபின் உங்கள் சம்பாத்தியத்தை எந்தக்குப்பையில் போடப்போகின்றீர்கள்? எந்தவிசயம் என்றாலும் எங்களிடம் சொல் நாங்கள் உன்னோடு துணைநிற்போம் உன்னை கடிந்துகொள்ளமாட்டோம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் பதிவிடுங்கள். நிறைய பிஞ்சு உள்ளங்கள் நிறைய சொல்லமுடியாமல்,பகிரமுடியாமல் அவர்களை தொலைத்து அந்த அன்பை தற்காலிகமாக தரும் மாற்று நபரிடம் ஏமாந்து சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விரக்தி நிலைக்கு சென்றுதான் இம்மாதிரியான துயர நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகவே இனிமுதற்கொண்டு பெற்றோர்களாகிய நாம் நம் சந்ததிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துவோமென சபதம் எடுப்போமாக!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்