விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு ஒன்றிய அமைச்சர் மகனின் ஜாமீன் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
44

புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடந்த போது விவசாயிகள் மீது திடீரென மோதிய காரால் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு கடந்த மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக இரண்டு வழக்கறிஞர்கள் தரப்பில் பொதுநல மனுவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார் தரப்பில் ரிட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘இந்த விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் எந்த ஒரு ஆதாரத்தையும் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கிறது. அதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 4ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ‘‘இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியுள்ள போது வழக்கின் பின்புலம் மற்றும் உண்மைகளை சரியாக ஆய்வு செய்யாமல் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது சட்ட விரோதமானதாகும். மேலும் பாதிப்படைந்தவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு அதனை கலைக்களஞ்சியமாக கருத முடியாது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இத்தனை அவசரம் காட்டியது ஏன் என்பது புரியவில்லை.

அதனால் இதுதொடர்பான மனுவை பரிசீலனை செய்ய அங்கேயே திருப்பி அனுப்புகிறோம். விரிவான விசாரணை நடத்தி ஒரு தகுதியான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்த நீதிபதிகள், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாகவும், ஒரு வாரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அமைச்சரை நீக்குவது எப்போது?: காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பதிவில், ‘கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இனி, அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் எப்போது பிரதமர் மோடி நீக்குவார்? எத்தனை நாட்களுக்குதான் விவசாயிகளை கொடுமைப்படுத்துவதை மோடி அரசு செய்து கொண்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடுகின்றனர். ஆட்சி மற்றும் அதிகாரத்தை கொண்டு விவசாயிகள் மீது மிக மோசமான கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்