வறுமையிலும் சாதித்து வரும் மாணவிகள்..

0
112

(31-01-2022) மருத்துவக் கனவை நிறைவேற்ற பல துடிப்புள்ள இளைய தலைமுறையினர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்று வருகின்றனர்.மருத்துவப் படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வெற்றி பெற்று பல ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது இலட்சிய பாதையில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வித்யா தம்பதியின் மகளான “மாணவி சத்யா” நீட் தேர்வில் வெற்றி பெற்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர உள்ளார். ராஜேந்திரன் ,வித்யா இருவருமே தனியார் கல்குவாரியில் கல்லுடைக்கும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி சத்யாவிற்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான இடமும் கிடைத்துள்ளது..

அதேபோல சாலையோரத்தில் கரும்புச்சாறு கடை வைத்துக் குடும்பம் நடத்தி வரும் திருவள்ளூர் மாவட்ட பழங்குடியினரின் மகளான “சினேகா” என்ற மாணவி 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் எஸ்டி பிரிவினருக்கான தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையைத் தெரிந்தெடுத்திருக்கும் அவர் எனது மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகளே இல்லை என பெருமிதம் கொண்டுள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்த 5 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அவர்கள் மருத்துவ படிப்பில் சேரவுள்ளனர். மாணவிகளின் பெயர்களும் மதிப்பெண்களும் பின்வருமாறு:
பிரியங்கா (414),
தீபஃச்ரி (361)
வினோதினி(283)
சங்கீதா (258)
கௌசல்யா (226). இம் மாணவிகளின் மருத்துவப் படிப்பிற்காக பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இவர்களுக்கு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்