திருவம்பாடி குட்டி சங்கரன் யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழப்பு.

0
56

திருச்சூர்: பெரிய காதுகளுக்குப் பிரபலமான திருவம்பாடி குட்டிசங்கரன் யானை நேற்று உயிரிழந்தது. மே 10ம் தேதி திருச்சூர் பூரம் நடைபெறவுள்ள நிலையில் குட்டிசங்கரன் யானையின் உயிரிழப்பு கேரள மாநிலத்தில் யானை பிரியர்களளின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 68 வயது மதிக்கத்தக்க இந்த குட்டிசங்கரன் யானை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனா டேவிஸ் என்பவருக்குச் சொந்தமானது இந்த யானை. டேவில் சிட்டிலப்பிலி என்ற இவரை திருச்சூர் மாவட்ட மக்கள் ஆனா டேவிஸ் என அன்புடன் அழைந்து வந்தனர். திருச்சூர் பூரம் நிகழ்ச்சியில் நடைபெறும் யானை அணிவகுப்பில் இவர் முக்கிய பங்குவகித்தவர்.

திருச்சூர் பூரம் போன்ற ஒரு பிரம்மாண்டமான விழாவை நடத்துவதற்கு சரியான யானைகள் கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கியமான பணியாகும்.அதை டேவிஸ் எப்போதும் தவறாது சிரமமின்றி செய்து வந்தார். மேலும், திருவம்பாடி கோயிலின் மீது கொண்ட அன்புக்காக தன்னுடைய யானைக்கு திருவம்பாடி குட்டிசங்கரன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில் திருவிழாக்களின்போது நடைபெறும் யானை அணிவகுப்பில் மிகவும் பிரபலமானது குட்டிசங்கரன் யானை.

பூரம் விழாவின்போது திருவம்பாடி பகவதியின் சிலையை எடுத்துச் செல்வதும் இந்த யானைதான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் டேவிஸ் இறந்ததையடுத்து குட்டிசங்கரன் யானையைப் பராமரிப்பது என்பது அவரது குடும்பத்திற்கு மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது. யானையின் உரிமை டேவிஸின் மனைவி ஓமனாவுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் யானையைப் பராமரிக்கும் செலவு அந்தக் குடும்பத்தினால் கையாள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது. இதையடுத்து, யானையின் உரிமையை வனத் துறையினருக்கு வழங்கினார் ஓமனா. இடையிடையே குட்டிசங்கரன் நோய்வாய்ப்பட்டதால் சிகிச்சை செலவும் அதிகமானது.

இதையடுத்து, ஓமனாவும், அவரது குடும்பத்தினரும் குட்டிசங்கரனின் சிகிச்சைக்கான நிதியுதவியைத் தொடர்ந்து வழங்கி வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக குட்டி சங்கரன் யானை வியாழக்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். வனத் துறையினர் யானையை சரியாகப் பராமரிக்காததே யானை இறந்ததற்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். குட்டிசங்கரன் யானை உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 443ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு 6 சிறைபிடிக்கப்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்