தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை . தமிழில் 100க்கு 100 எடுத்து சாதித்த மாணவி துர்காவிற்கு குவியும் பாராட்டு

0
78

நடந்துமுடிந்த 2022-ம் ஆண்டுக்கான 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 9,12 ,620 மாணவர்கள் எழுதினர். அதில் 4,52,499 மாணவியர்களும் 4 ,60,120 மாணவர்களும். இத்தேர்வில் மொத்தம் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களின் தேர்ச்சி சதவீதம் 90.07 % ஆகும். இதில் மாணவியர் 4,27,073 (94.38%) பேரும் மாணவர்கள் 3,94,920 (85.83%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதுபோல தமிழகத்தில் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,06,277ஆகும் , அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,21,622 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,84,655 ஆகும். இத்தேர்வை எழுதிய மொத்தம் 7,55,998 (93.76%) மாணவர்களில் மாணவியர் 4,06,105 (96.32%) பேரும் மாணவர்கள் 3,49,893 (90.96%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்விலும் மாணவர்களை விட மாணவியர் 5.36 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

நடந்து முடிந்த 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற ஒரே மாணவியும் இவர்தான். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சங்கரவித்யாலாயா பள்ளியில் பயிலும் மாணவி துர்கா, தமிழ் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்து உள்ளார்.

திருச்செந்தூர் அருகே உள்ள குருகாட்டூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த இம்மாணவி மேல்படிப்பில் வேளாண் துறையைத் தேர்ந்தெடுத்து பயில விருப்பம் தெரிவித்துள்ளார். “மாநிலத்திலேயே இவர் ஒருவர் மட்டும் தான் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதும் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பது இதுவே முதல் முறை” என்பதும் இவரது கூடுதல் சிறப்பு.

மேலும் தமிழகத்தில் பல்வேறு துறையினரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தமிழில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கே பெருமை சேர்த்த அம் மாணவியின் எதிர்காலக் கனவை நிறைவேற்ற அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் மேற்படிப்பிற்காக அரசு இம் மாணவியின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி அளித்து மாணவியின் படிப்பிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் பல்வேறு அமைப்பினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்