சீமை கருவேல மரத்தை முழுமையாக அகற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..

0
144

(02-02-2022)

தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் செழிப்பாக பரவிக் கிடக்கும் “சீமைக் கருவேல மரமானது” கருவேல விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு மனிதனால் உருவாக்கப்பட்ட மரமாகும். விறகுப் பஞ்சத்தைப் போக்க காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகமெங்கும் இம்மரத்தின் விதைகள் தூவப்பட்டன.அதற்கு முன்பு தமிழகத்தில் இவ்வகையான மரங்களே கிடையாது..கடும் வரட்சியான கோடைகாலத்திலும் கூட இம்மரமானது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பச்சை பசேலென்று வளரக்கூடியது. நிலத்தடி நீர்மட்டத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய இம்மரங்களின் வேர்கள் 40 அடி அகலம், 40 அடி ஆழம் வரை சென்று நிலத்தில் உள்ள நீரினை முழுமையாக உறிஞ்சி விடும் தன்மை கொண்டது.

நிலத்தடி நீர் வற்றிவிட்டால் காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி குடித்து விடும் தன்மையுடையது. இயற்கைக்கும் உயிர்களுக்கும் பெரும் கேடு தரும் இம்மரத்தின் தன்மையை அறிந்த கேரள அரசு கேரளத்தில் இதற்கு முழுமையான தடையை விதித்து கேரளா முழுவதும் இம்மரங்களை முற்றிலுமாக அகற்றி விட்டது. தற்போது கேரளாவில், ஒரு சீமைக்கருவேல செடியைக் கூட பார்க்க முடியாத சூழலைக் கேரள அரசு உருவாக்கியிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் செழிப்பாக பரவி கிடக்கும் இம்மரங்களை முழுமையாக அகற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இச்சூழ்நிலையில் உயர் நீதிமன்றம் தற்போது தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தமிழகமெங்கும் நிலத்தடி நீரைக் கெடுப்பது மட்டுமின்றி நிலத்தையும் பயனற்ற நிலமாக மாற்றக்கூடிய சீமை கருவேல மரத்தை வேரோடு முழுமையாக அகற்ற முறையான திட்டத்தை வகுத்து அந்த அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமைக்கருவேல மரத்தை அகற்றுவது தொடர்பான முழுமையான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய 6 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்