ராமன் விளைவு கோட்பாடு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அறிவியல் தினம் இன்று

0
376

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் தனது புகழ்மிக்க ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை வெளியிட்ட பிப்.28-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். இவர் 1904ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

ச. வெ. இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்