தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0
134

புதுடெல்லி,தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தலில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்கிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேர்தல் சீர்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;-

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை. ஆதார் – வாக்களர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது.

ஒரேநபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்பு வழங்கப்படும். இது இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அவரது மனைவி வாக்களிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் அவருக்கு பதிலாக வாக்களிக்க சட்டத்தில் இடம் இல்லை. தற்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய மசோதாவில் பெண் அதிகாரிக்கு பதிலாக அவரது கணவர் வாக்களிக்க உரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்களின் போது வாக்குப்பதிவு பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் நடைபெற்று வந்தது. பள்ளி, கல்லூரிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. ஆனால், இனி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்த கட்டிடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம். திருமண மண்டபங்கள், வணிகவளாகங்கள் என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்