கோயிலை இடிக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு..

0
240

பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் கிராமத்தில் நெடுஞ்சாலைப் பகுதியை ஒட்டி உள்ள செல்வ விநாயகர் கோயிலை கடந்த 20 வருடங்களாக அக்கிராமத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர் . இந்நிலையில் அந்த கோயிலானது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இக்கோயிலை 15 ஆண்டுகளுக்குள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோயிலை அகற்ற நாளை 22ஆம் தேதி கடைசி நாள் என்பதால் வருவாய் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து அக்கோயிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அங்கு ஒன்றுகூடி கோவிலை இடிக்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிராம மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோயிலானது தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.

கோயிலில் உள்ள நான்கு சாமி சிலைகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி அதனை ஜேசிபி எந்திரத்தில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் தொடர்ந்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்