உச்சநீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

0
120

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?

வழக்கறிஞரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரை பிபிசி செய்திக்கு அளித்த பேட்டி. வருவதாவது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமைலான மூன்று நீதிபதிகள் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ` இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், பழிவாங்கும் உணர்வுடனும் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்துள்ளனர். நாங்கள் கடந்த 28 ஆம் தேதி முன்ஜாமீன் மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தோம்.

கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக இந்த வழக்கை ஆறாம் தேதி(இன்று) எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதற்குள் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அது தவறு என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக் காட்டியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போதே அவரைக் கைது செய்தது விதிகளுக்கு முரணானது’ என்று வாதிட்டார்.

இதற்கு மூன்று நீதிபதிகளும் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தலைமை நீதிபதி ரமணா ,தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை நோக்கி` உச்ச நீதிமன்றம் உறங்குவதாக நினைக்கிறீர்களா? இதுவரை உச்ச நீதிமன்றம் விடுமுறையில் இருந்தது. அவர் முன்ஜாமீன் மனு போட்டுள்ளார். நாங்கள்தான் ஆறாம் தேதி எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தோம். ஒரு நாள் அவகாசம் இருக்கும்போது அவரை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? , உச்ச நீதிமன்றத்தின் மீது தமிழ்நாடு அரசு வைத்துள்ள மரியாதை இதுதானா? இதனை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். அவரது வழக்கறிஞரை தொந்தரவு செய்தீர்களா?’ என்றனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை. அவரைக் கைது செய்துள்ள விவரத்தை மட்டுமே என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர். விரிவான தகவல்களை அரசிடம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைது செய்யக்கூடாது என தெரியாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு மூத்த வழக்கறிஞர் கிரி வாதிடும்போது, ` இந்த வழக்கில் இன்னும் 3 பேரைக் கைது செய்ய உள்ளனர். அவர்களில் ஒருவர் வழக்கறிஞர்’ என்றார். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்யக் கூடாது என நீதிபதிகள் தடை விதித்தனர்.

இதில், வழக்கின் முதல் குற்றவாளியான நல்லதம்பியின் வழக்கறிஞர்,நல்லதம்பிக்கு முன்ஜாமீன் வேண்டும் எனக் கேட்க, நீங்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கூறிய நீதிபதிகள். இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்” .

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்