கோடை வெயிலின் தாக்கத்தால் தமிழக வனங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ.

0
252

தமிழகத்தில் இப்போதே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களின் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. வனப்பகுதிகளில் உள்ள பல அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன. இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதமே அதிகரித்துள்ளதால் திண்டுக்கல் ,நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் வெயிலின் வெப்பத்தினால் காய்ந்த சருகுகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. நன்கு வளர்ந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் இயற்கையாக வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதும் வழக்கம். சில நேரங்களில் மனிதர்களாலும் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதுண்டு. கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்வேறு அரிய வகை மரங்கள் செடி கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. அதுபோல தென்காசி மாவட்டம் குண்டாறு அணைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் காட்டுத் தீயால் எரிந்து சாம்பலாகின. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சுமார் 50 ஏக்கர் அளவிலான நிலங்களை எரித்து நாசமாக்கியது

கொடைக்கானல் வனப்பகுதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வனப்பகுதியில் பல இடங்களில் தற்போதும் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பனி காலம் முதல் கோடை காலத்திற்கு இடைப்பட்ட நாட்களில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. மேலும் சுற்றுலா செல்லும் பயணிகள் சிகரெட்டுகளை புகைத்து விட்டு சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வனப்பகுதியில் தூக்கி வீசுவதாலும் எளிதாக காட்டுத்தீ ஏற்பட்டு பெருமளவு மரம் செடி கொடிகளை எரித்து நாசம் ஆக்குவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வி.தமிழ்நெறி,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்